சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம்.. யார் யார் பங்கேற்பு.. அழைத்தும் வராதது யார்?
சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யார்? அழைப்பு விடுத்தும் பங்கேற்காதவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொண்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது என அமித்ஷா கூறினார். எனினும், தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படாமல் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களின் தொகுதி உயர்த்தப்படாலும் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பது திமுக உள்ளிட்ட கட்சிகளின் வாதமாக உள்ளது.

யார் யார் பங்கேற்கிறார்கள்
இதற்க நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே இவ்விவகாரம் தொடர்பாக கூட்டுக் குழு அமைக்க, கடந்த மார்ச் 5-ம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-
* கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய கேரள தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்பி
* தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
* பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
* ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் அமைச்சர் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
கர்நாடகா, ஆந்திராவில் யார் யார்?
* கர்நாடகாவில் இருந்து துணை முதல்வர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணா மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
* ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மிதுன் ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் வினோத்குமார், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கம்பக்குடி சுதாகரன் ஆகியோர் இன்று வருகிறார்கள்.
அழைப்பு விடுத்தும் வராதது யார்?
* ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக தெலுங்கு தேசம் உள்ள நிலையில் இன்றைய தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில் அந்த கட்சியின் பிரதிநிதிகள் பெயர் இல்லை.
* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications