நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளைய தினம் அரசு முறை பயணமாக டெல்லி செல்கிறார். அவர் நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் செல்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே அவர் டெல்லி செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராகப் பதவியேற்ற விஜய், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வராகத் தனது முதல் டெல்லி பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்திருந்தார். இதற்கிடையே இப்போது முதல்வர் விஜய் மீண்டும் டெல்லிக்குச் செல்கிறார். முதல்வர் விஜய், நாளை (ஜூன் 10) முதல் மூன்று நாட்களுக்குத் தலைநகர் டெல்லியில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் டெல்லி புறப்படுகிறார்.. வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை டெல்லியில் தங்கியிருக்கும் முதல்வர், மாலை 6 மணியளவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் என்பது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டும் ஒரு முக்கியமான அமைப்பாகும். இதன் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள். மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள், நாட்டின் பொருளாதார இலக்குகள் குறித்து இதில் விவாதிக்கப்படும். முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்துவார் என தெரிகிறது.
நிதி ஆயோக் கூட்டம் தவிர, முதல்வர் விஜய் மேலும் சில முக்கியத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.. குறிப்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார். அதேபோல துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை டெல்லிக்குச் சென்றபோதே காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்கவில்லை. அது பேசுபொருளான நிலையில், இந்த முறை டெல்லி பயணத்தில் விஜய், காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications