கருமுட்டை விற்பனை! கடிவாளம் போட்ட தமிழக அரசு! முறைகேடு செய்தால் இனி இத்தனை வருசம் ‘கம்பி’ தான்.!
சென்னை : ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் அந்த சிறுமின் தாயும் அவரது உறவினர்களும் பல மருத்துவமனைகளில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது

கருமுட்டை விவகாரம்
இந்நிலையில் ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும், குடும்பநலத்துறை இயக்குநர் துணைத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குழு அமைப்பு
தற்போதைய சட்டத்தால் 23 முதல் 25 வயது வரை வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும் எனவும், அதுவும் 8 முறை மட்டுமே ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டைகளை சேகரிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

சிறை தண்டனை
அடுத்ததாக இந்த சட்டத்தை மீறினால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. குழந்தைப் பேறு இல்லாத பெண்களை மாற்று வழியில் கருத்தரிக்க செய்யும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மருத்துவ மையங்கள் நாடு முழுதும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மருத்துவ மையங்கள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உதவி இனப்பெருக்க ஒழுங்கு மசோதா
இந்நிலையில், இந்த உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிப்பதோடு, மகப்பேறுக்கான சிகிச்சையை முறையாகவும், பாதுகாப்பானதாக செய்யவும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.












Click it and Unblock the Notifications