தவெக அரசின் மீது நம்பிக்கை இழந்த அரசு ஊழியர்கள்? விருப்ப ஓய்வு கேட்டு குவியும் விண்ணப்பங்கள்.. ஏன்?
சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது ஒருவித தயக்கமும் அதிருப்தியும் நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசு தொடர்ந்து கடன் வாங்கி வருவதால், எதிர்காலத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்ற பணப் பலன்கள் முறையாகக் கிடைக்குமா என்ற அச்சத்தில், ஏராளமான ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்
தமிழக அரசுத் துறைகளில் தற்போது ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அரசு விதிகளின்படி இவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆகும். பல துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய நிலை இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக ஆட்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரசின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய கடன்கள் வாங்கப்பட்டு வரும் சூழலில், வருங்காலத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து சேர வேண்டிய நிதிப் பலன்கள் சரியான நேரத்தில் கைக்கு வந்து சேருமா என்ற கவலை ஊழியர்களிடையே பரவி வருகிறது.
அறிவிக்கப்படும் புதிய திட்டங்களும் கடன் சுமையும்
சமீபகாலமாகப் பல மக்கள் நலத் திட்டங்களை தவெக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்களுக்கான 'மகளிர் வெற்றிப் பயணம்', குடும்பங்களுக்கு உதவும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், 'அண்ணன் சீர்' திட்டம், பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பெருந்திட்டப் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இத்தகைய திட்டங்களால் அரசின் நிதிச் செலவும் கடன் சுமையும் மேலும் உயர வாய்ப்புள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படாத நிலை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்கள் ஊழியர்களை மேலும் யோசிக்க வைத்துள்ளன.
விருப்ப ஓய்வு (VRS) கேட்டு விண்ணப்பங்கள் குவிவது ஏன்?
அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் தங்களின் ஓய்வூதியப் பாதுகாப்பு குறித்த அச்சத்தால், பல அரசு ஊழியர்கள் பணிக்காலம் முடிவதற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் தொடங்கி மாநிலத்தின் பல்வேறு மாவட்ட அலுவலகங்கள் வரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பங்களை அளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
90 நாட்கள் விதிமுறை என்ன சொல்கிறது?
விருப்ப ஓய்வு குறித்து அரசு ஊழியர்கள் தரப்பில் சில முக்கிய நடைமுறைகள் பகிரப்பட்டுள்ளன. அரசு விதிகளின்படி, ஒருவர் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்தால், அந்த மனு மீது உடனடியாக முடிவு எடுக்கப்படுவதில்லை.
மனு சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்கள் (சுமார் 3 மாதங்கள்) கழித்தே அதன் மீது அரசுத்துறை சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழியர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருக்கவும், இந்த 90 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற விரும்பினால் அதற்கான வாய்ப்பை வழங்கவும் இந்த கால அவகாசம் நடைமுறையில் உள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்புவதில் உள்ள நிதிச் சிக்கல்களால், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் உயர்த்துவது குறித்த யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடன் சுமை மற்றும் பணிச்சுமை குறித்த அரசு ஊழியர்களின் இந்தத் தயக்கத்திற்கு அரசு எத்தகைய விளக்கத்தையோ அல்லது தீர்வையோ தரும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.



Click it and Unblock the Notifications
