தவெக ஆட்சியில்.. தமிழ்நாட்டின் நிலைமையை பாருங்க! டேட்டாவோடு தங்கம் தென்னரசு ஷார்ப் அட்டாக்!
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.. புள்ளிவிவரங்களுடன் தவெக அரசின் தலைமையில் தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்திருக்கிறது? என்பதை விமர்சனமாக முன்வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
உண்மையான தகவல்கள்
தங்கம் தென்னரசு வைத்த புள்ளிவிரங்கள் உண்மையானதுதான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.11,298 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.11,661 என வெறும் 3% மட்டுமே அதிகரித்திருக்கிறது. நாட்டின் சராசரி ஜிஎஸ்டி வருவாய் 16% ஆக இருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வளர்ச்சி அதைவிட குறைவாக இருக்கிறது.
இது தமிழ்நாட்டுக்கு பெரிய பிரச்சனை. அரசின் சொந்த வரி வருவாய் குறையும்போது, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும். வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ள.. பொது சந்தையில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரும். இது தமிழகத்தின் மொத்த கடன் சுமையை அதிகரிக்கும். அதேபோல மத்திய அரசிடமிருந்து நமக்கு கிடைக்கும் வருவாயும் குறையும்.
அதாவது மாநிலங்களின் நிதித் திறன் மற்றும் வருவாய் பெருக்கும் திறனை அடிப்படையாக கொண்டு மத்திய நிதிக்குழு நிதிப் பகிர்வை முடிவு செய்கிறது. தமிழகத்தின் வருவாய் வளர்ச்சி தொடர்ந்து மந்தமாக இருந்தால் எதிர்காலத்தில் மத்திய வரிகளில் இருந்து மாநிலத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு குறைய வாய்ப்புள்ளது.
மட்டுமல்லாது 3% வளர்ச்சி என்பது தமிழகத்தில் நுகர்வு மற்றும் உற்பத்தி துறை மந்தமாக உள்ளதை காட்டுகிறது. 18-24% வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்கள் அதிக சந்தை தேவையை கொண்டிருப்பதால்.. புதிய அந்நிய நேரடி தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை தவிர்த்த அந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும்.


Click it and Unblock the Notifications
