நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்..ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்..அடப்பாவமே
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் பரபரப்பான புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.

மாறாக 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் அவர் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய் ஓட்டளித்தார். விஜய் தனது வீட்டில் இருந்து காரில் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஓட்டளித்தார். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவரை காண ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. நடிகர் விஜய்யை போலீசார் வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதன்பிறகு விஜய் ஓட்டுப்போட்டு காரில் வீடு திரும்பினார்.
அதன்பிறகு நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‛‛நடிகர் விஜய் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க 200க்கும் அதிகமானவர்களுடன் வந்தார்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் இப்படி கூட்டமாக வருவது என்பது தேர்தல் விதிமீறலாகும். இதனால் தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications