ஸ்டாலினுக்கு யார் ஐடியா கொடுப்பது? சுனில் குமார் நியமனத்தால் அரசு மீது சீனியர் ஐபிஎஸ்கள் அதிருப்தி
சென்னை: தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. இது தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறை அரசு பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதேபோல் சீருடை பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்யுஎஸ்ஆர்பி (TNUSRB) மேற்கொண்டு வருகிறது.

டிஎன்யுஎஸ்ஆர்பியின் முழு விரிவாக்கம் என்பது தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பதாகும். இந்த வாரியம் சார்பில் பல்வேறு தேர்வுகள் நடத்தி காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை), 2ம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு சார்பில் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டிஜிபி சுனில் குமார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.

இவர் 1988 ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிவார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி சுனில் குமார் டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு புதிய பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இந்த தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை நியமித்திருப்பது தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பொதுவாக தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக தற்போது டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தான் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்படி இதற்கு முன்பு டிஜிபி அந்தஸ்தில் சீமா அகர்வால் ஐபிஎஸ் இந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இதனால் இப்போதும் தமிழகத்தில் பணி செய்யும் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ்ஸை தான் தமிழக அரசு நியமனம் செய்திருக்க வேண்டும் என்று உள்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
இதனால் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு யார் தான் இப்படிப்பட்ட யோசனையை முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கிறார்களோ? என ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications