தபால் ஓட்டுக்களை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம்.. தேர்தல் கமிஷன் வெளியிட்ட 10 காரணங்கள்
சென்னை: தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி தேர்தல் கமிஷன் 10 காரணங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றினை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளையே எண்ணப்பட்டு முடிவுகள் நாளை காலை முதல் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். அப்படித்தான் இந்த முறையும் தபால் வாக்குகளே நாளை காலை முதலில் எண்ணப்படும்.

அதிகரித்துள்ளது
முன்பு ஒரு தொகுதிக்கு 500 முதல் 600 தபால் ஓட்டுகள்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே தபால் ஓட்டுகள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் 1,500 முதல் 5 ஆயிரம் ஓட்டுகள் வரை தபால் ஓட்டுகள் மாறி உள்ளது. இப்போதைய நிலையில் கடும் போட்டி ஏற்பட்டால் பல தொகுதிகளில் தபால் ஓட்டுகளே ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விடும் அளவுக்கு மாறக்கூடும்,.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில் தபால் ஓட்டுகள் குறித்து கடந்த முறை பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி ஏற்படக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது. எந்த ஓட்டு செல்லும், எது செல்லாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியின் முடிவை பொறுத்து இருக்கும் என்கிறது தேர்தல் ஆணையம். தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் 10 காரணங்களை கூறி உள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

13 சி படிவம்
1. '13-C' படிவ உறைக்குள் '13-A'படிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும்.
2.உறுதிமொழி, வாக்காளரால் முறைப்படி கையொப்பமிடப்படாமல் இருத்தல் அல்லது சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருத்தல் அல்லது பிற வகையில் பெரிதும் குறைபாடாக இருத்தல், கண்டறியப்பட்டால் நிராகரிக்கலாம்.
3. உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், '13-B'இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுப்பட்டிருத்தல் தெரியவந்தால் நிராகரிக்கலாம்.

வாக்குகள் பதிவாகாவிட்டால் செல்லாது
4. எந்த ஒரு வாக்கும் அதில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது செல்லாது.
5. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் அது செல்லாது.
6. போலியான வாக்குச் சீட்டாக இருந்தால் அது செல்லாது.

சிதைக்கப்பட கூடாது
7. வாக்குச் சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும்.
8. தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லையாயின் நிராகரிக்கப்படும்.

வாக்களித்தல் குறியீடு
9. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஐயத்திற்கிடமாக இருக்கும் வகையில் வாக்குச்சீட்டில் உள்ள குறி இருக்குமாயின் அது செல்லாது.
10. வாக்களிப்பவரை இன்னாரென்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக்குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும்" இவ்வாறு தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications