தமிழகத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்- நள்ளிரவில் பொதுமக்களுடன் கேக் வெட்டிய ஆட்சியர், எஸ்பி!
சென்னை: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பொதுமக்களுடன் இணைந்து நள்ளிரவில் ஆட்சியர், எஸ்பி ஆகியோர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டை உற்சாகமாக நாம் வரவேற்று வருகிறோம். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம்
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் விதிமுறையை மீறி சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் உடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வந்தார். இந்நிலையில் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை ஒட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள், சாலை வழியாக வந்த மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர், ஆட்டோ ஓட்டுநர்கள்,வெளிநாட்டு பயணிகள் என அனைவருடன் இணைந்து சாலையில் பிரமாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும், அவர்களுக்கு கேக் இனிப்புகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மேலும் இச்செயலுக்கு உறுதுணையாக காவல் பணியில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் அதற்கு பெரிதும் ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். சாலை சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீர் என எஸ்.பி. பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சி அளித்தது.

வேலூர்
புதிய ஆண்டை வரவேற்கும் விதத்தில் வேலூர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே பொதுமக்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து புதிய ஆண்டின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அப்போது அங்கே கூடியிருந்த பொதுமக்களும் காவலர்களும் ஹாப்பி நியூ இயர் என உரைக்க கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி
புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற மதுவுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். கடற்கரை சாலையில் ஏற்பாடு செய்திருந்த. கேளிக்கை நிகழ்ச்சியில் பாடலுக்கு ஏற்றவாறு புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகங பட்டாசுகள் வெடித்தும், ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காரைக்கால்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் தமிழக பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்த கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.கண் கவரும் பல வண்ண வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியார்கள் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கீழ்திசை நாடுகளின் லுார்து நகரம் என என்றழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டு தின நள்ளிரவு பிரார்த்தனை விண்மீன் ஆலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் நடைபெற்றது . 2022 ம் ஆண்டிற்க்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் விதமாக,இரவு 10.45 மணியில் இருந்து 11.45 மணிவரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரையும்,2023 ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு,தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது....

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவ ஆலயங்களிலும் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடியில் 440 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனிமயமாதா பேராலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தாராபுரம்
தாராபுரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் சாலையில் விபத்து இல்லாமல் செல்வதற்காக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேக் வெட்டி லாரி,கனரக வாகனங்கள், ஓட்டுநர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நெல்லை
நெல்லையில் 2023 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் அருட்திரு.அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி மற்றும் புத்தாண்டு செய்திகளை வழங்கினார். இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள் மற்றும் நெல்லை மாநகர வீதிகள் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. வீதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட காவல் துறை சார்பில் தடைவிதித்த நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மாநகரம் முழுதும் 40 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று நெல்லையில் இந்துக்கள் வழிபாட்டு தலமான நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications