பரந்தூர் ஏர்போர்ட்.. சர்வதேச டெண்டரை கோரிய தமிழக அரசு! ஏர்போர்ட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் இப்போது மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியிலேயே இருப்பதால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியவில்லை.
இதனால் பல திட்டங்கள் ஹைதராபாத், பெங்களூர் ஏர்போட்டிற்கு சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சியும் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாகவே சொல்லப்படுகிறது.
இது என்ன பாகிஸ்தானா? வாக்காளர்களுக்கு போலீசார் இடையூறு.. கொந்தளித்த அகிலேஷ் யாதவ்

பரந்தூர் ஏர்போர்ட்
இதையடுத்து சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கான இடம் நீண்ட ஆய்வுக்குப் பின்னரே தேர்வு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அமையவுள்ள இந்த இரண்டாவது விமான நிலையம் மாநிலத்தின் வளர்ச்சியை பூஸ்ட் செய்யும் என வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும், விமான நிலையத்திற்கு எதிராக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவும் கொடுத்துள்ளனர்.

டெண்டர்
போராட்டம் நடத்துபவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே, நிலத்திற்கு இழப்பீடும், வீடுகளுக்கு மாற்று இடமும் பணமும் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனமான டிட்கோ பரந்தூர் ஏர்போர்ட் மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ளது. பரந்தூர் ஏர்போர்ட் அமைப்பது தொடர்பாகத் தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனம்
விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்வதே இதன் முக்கிய நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள மீனம்பாக்கம் ஏர்போர்ட் மற்றும் புதிய பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு விரும்பும் நிறுவனங்கள் வரும் ஜன.6ஆம் தேதிக்குள் விமான நிலையங்கள் தொடர்பாக ஆய்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை அனுப்ப வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளி
மேலும், வரும் காலத்தில் 2669 - 70ம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் குறித்தும் இடம் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது. ஆலோசனை நிறுவனங்கள் வரும் ஜன.6ஆம் தேதிக்குள் தங்கள் டெண்டரை சமர்ப்பிக்கலாம். இந்த டெண்டர்கள் வரும் ஜன.6ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. விமான நிலைய கட்டுமானத்தைத் தொடங்க இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பரந்தூரில் புதிய ஏர்போர்ட்டை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது புதிய ஏர்போர்ட்
கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கினாலும் கூட, அவை முழுவதுமாக முடிந்து, முறையான ஒப்புதல்கள் எல்லாம் கிடைக்கக் குறைந்தது சில ஆண்டுகள் ஆகிவிடும், வரும் 2028க்குள் பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அந்த இலக்கை அடைய பரந்தூர் விமான நிலையம் முக்கியமானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு முன்பு கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.