துபாயை சுற்றிப் பார்க்கப் போகிறோம்.. விமானத்தில் பறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்! செம ஹேப்பி!
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காகத் துபாய் செல்கின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கற்றல் திறனை அதிகரிக்கக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 45 மாணவர்களுக்கு ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மற்றொரு நடவடிக்கையாக வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களைச் சர்வதேச கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வினாடி வினா போட்டிகளில் வென்ற 68 மாணவ-மாணவிகள் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா செல்கின்றனர். அவர்களுடன் அரசு ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர்.

இந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் அதே விமானத்தில் அமைச்சர் அன்பில் மகேசும் உடன் செல்கிறார்.
துபாய் செல்லும் அரசு மாணவர்கள் அங்கு மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை பார்க்க உள்ளனர். கிராண்ட் மசூதி, ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளனர்.
துபாயில் இவர்களை வரவேற்றுத் தங்க ஏற்பாடுகளை அமீரக திமுக பொறுப்பாளர் எஸ் எஸ் மீரான் செய்துள்ளார். மேலும், மாணவர்களை அங்குள்ள சுற்றுலா தளங்களை எஸ் எஸ் மீரான் சுற்றிக் காட்டவும் உள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் துபாய் செல்லும் நடைமுறைகளில் எஸ் எஸ் மீரான் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.