பெட்ரோல் விலை உயர்வு..மாநில அரசுகளின் வரிதான் காரணம்..தமிழக அரசு வரியை குறைக்கணும்.. வானதி சீனிவாசன்
சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து தமிழ்நாடு அரசு மக்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா சமயத்தில் குறைந்திருந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே சதமடித்து விட்டது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 105 ரூபாயையும் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தலைநகர் சென்னையில் 31 காசுகள் உயர்ந்து 10.1.37 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டர் 9 காசுகள் உயர்ந்து 94.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானதி சீனிவாசன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

ஒரே விலை
அப்போது பேசிய அவர், "இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விலைக்குத் தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை வழங்குகிறது. ஆனால் சில மாநில அரசுகள் சில்லறை விற்பனைக்கு முன் கூடுதலாக வரியை விதித்து வசூலிக்கின்றனர். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. அப்படிக் கொண்டு வந்தால் தான் விலை குறையும்.

வரியைக் குறைக்க வேண்டும்
தற்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு ஒடிசா போன்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளன. அதேபோல திமுகவும் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்க வேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் துன்பத்தைப் போக்க பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications