தவெக கல்வி விருது விழா.. 3ம் கட்டமாக வழங்கும் விஜய்.. மாணவர்களுக்கு கிடைத்த கவுரவம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா 3ஆம் கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் இந்த பணிகளை தொடங்கினார். தற்போது தொடர்ந்து 3ஆம் ஆண்டாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தவெக கல்வி விழா
ஒவ்வொரு தொகுதிக்கும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வைரத்தில் பரிசு அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏற்கனவே 2 கட்டங்களாக பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்ட கல்வி விழா
மாமல்லபுரத்தில் நடந்த மே 30ஆம் தேதி 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. மனதையும், சிந்தனையையும் தைரியமாகவும், ஜனநாயகமாகவும் வைத்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
அரசியல் பேசிய விஜய்
ஜனநாயகம் என்பது முறையாக இருந்தால், எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கும். அதற்கான முதல் படியாக வீட்டில் உள்ள பெற்றோரிடம், ஜனநாயக கடமையை சரியாக சொல்ல வலியுறுத்துங்கள். ஜனநாயக கடமையை சரியாக செய்வதென்றால், இதுவரை ஊழல் செய்யாதவர்கள் யாரென்று பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள் என்று பேசி இருந்தார்.
3ஆம் கட்டமாக நடக்கும் கல்வி விழா
நீட் தேர்வு மட்டுமா உலகம் என்று விஜய் பேசியது கடுமையான விமர்சனத்தை பெற்றது. அதேபோல் மாணவர்களிடம் அரசியல் பேசியதற்கும் பலரும் விமர்சித்தனர். இதன்பின் ஜூன் 4ஆம் தேதி 84 தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 3வது கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
முழு நேர அரசியல்
இதன்பின் இந்த வாரத்திலேயே விடுபட்ட தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்கும் விழா நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கல்வி விழாவிற்கு பின் தவெக தலைவர் விஜய் அடுத்தக்கட்ட அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் பிறந்தநாளன்று அரசியல் சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications