இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.. மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய ஆசிரியர்கள்
சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான எஸ்எஸ்ஏ எனும் சமக்ரசிக்ஷ அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 152 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று முதல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கான சமக்ரசிக்ஷ அபியான் திட்டத்துக்கான கல்வி நிதியை விடுவிப்பது தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ஆனால், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இருமொழிக் கல்விக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுகாகாத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான எஸ்எஸ்ஏ எனும் சமக்ரசிக்ஷ அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 152 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிதியை ஒதுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன
இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து பணிக்குச் சென்றுள்ளனர். இன்று முதல் ஒரு வார காலத்திற்கு இந்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications