எந்தா சாரே இது நியாயம்? தமிழகம் ரூ.1 கொடுத்தால் திரும்பக்கிடைப்பது 29 பைசா மட்டுமே! அமைச்சர் விளாசல்
சென்னை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு 1 ரூபாய் கொடுத்தால் திரும்பக் கிடைப்பதோ வெறும் 29 பைசா மட்டுமே என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் வெளுத்து வாங்கியுள்ளார்.
பாஜக அரசு பாரபட்சம்: தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டத் தொடரான இன்று, மத்திய அரசுக்கு தமிழ்நாடு கொடுக்கும் வரி வருவாய் பற்றியும் பதிலுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் பகிர்வுத் தொகை குறித்தும் ஆதாரங்களுடன் பேசி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அலற வைத்துள்ளார். நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என சரமாரி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

என்ன நியாயம் இது?: உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் நிதி ஒதுக்கீட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு மத்திய பாஜக அரசை விளாசினார் அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழ்நாடு 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா கொடுக்கும் மத்திய அரசு, இதே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 1 ரூபாய் கொடுத்தால் ரூ.2.73 திரும்பக் கொடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.
எவ்வளவு வேறுபாடு?: கடந்த 2014-2015 நிதி ஆண்டு முதல் 2022-2023 வரையிலான நிதி ஆண்டு வரை மட்டும் மத்திய அரசின் நேரடி வரியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ரூ.5.16 லட்சம் கோடி என்றும் இவ்வளவு பெரிய தொகையை நாம் வரி பகிர்வாக மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறோம் என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தக் காலகட்டத்தில் நமக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்த தொகையோ ரூ.2.08 லட்சம் கோடி மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.
வெளுத்து வாங்கிய தங்கம்: பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் நிலைமை வேறாக இருக்கிறது என்று கூறிய அவர் கடந்த 2014-2015 நிதி ஆண்டு முதல் 2022-2023 வரையிலான நிதி ஆண்டு வரை மத்திய அரசின் நேரடி வரியில் உத்தரப்பிரதேசத்தின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி மட்டுமே என்றும் ஆனால் வரி பகிர்வில் உத்தரப்பிரதேசத்துக்கு மத்திய அரசு திரும்பிக் கொடுத்திருப்பது ரூ.9.08 லட்சம் கோடி எனவும் புள்ளி விவரங்களை அடுக்கினார்.
சுண்ணாம்பு -வெண்ணெய்: உத்திரப்பிரதேசம் மாநில அரசி வரி பங்களிப்பை விட 4 மடங்கு கூடுதலாக வரி பகிர்வை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்றார். ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கக் கூடிய அரசு மத்திய பாஜக அரசு என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார்.
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்துக் கொண்டே வருவது எந்த வகையில் நியாயம் என சட்டசபையில் வினவி கவனம் ஈர்த்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.












Click it and Unblock the Notifications