கூட்டணிக்கு அச்சாரம் போட்ட திருமா.. மீண்டும் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை! நோ’ சொன்ன உதயநிதி
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல புதிய கணக்குகளைத் திறந்துவிட்டுள்ளன. குறிப்பாக, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், எதிர்காலக் கூட்டணியை மனதில் வைத்து திமுக தலைமையோடு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், அதற்கு உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

இரண்டு தொகுதிகளின் அதிகாரப்பூர்வ இறுதி வாக்கு விவரங்கள்
இவ்விரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.
1. தாராபுரம் தொகுதி இறுதி முடிவுகள்:
பி. சத்யபாமா (தவெக): 66,841 வாக்குகள் (வெற்றி)
எஸ். சுகன்யா (திமுக): 57,370 வாக்குகள் (இரண்டாம் இடம்)
கே. பானுமதி (அதிமுக): 45,280 வாக்குகள் (மூன்றாம் இடம்)
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி): 5,268 வாக்குகள்
லட்சுமணன் (சிபிஐ): 1,157 வாக்குகள்
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளரை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
2. மதுராந்தகம் தொகுதி இறுதி முடிவுகள்:
கே. மரகதம் குமரவேல் (தவெக): 72,240 வாக்குகள் (வெற்றி)
இ. பரந்தாமன் (திமுக): 52,098 வாக்குகள் (இரண்டாம் இடம்)
எஸ். கணிதா சம்பத் (அதிமுக): 46,356 வாக்குகள் (மூன்றாம் இடம்)
ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி): 2,298 வாக்குகள்
பி. சுகந்தி (சிபிஎம்): 1,701 வாக்குகள்
இங்கு தவெக 20,142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இடைத்தேர்தல் களத்தில் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதுவுமின்றித் தனித்துப் போட்டியிட்ட திமுக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மிக வலுவான இரண்டாவது இடத்தைப் பிடித்தது. விசிக ஆதரவு ஆளும் தவெக பக்கம் நின்ற போதிலும், திமுகவின் வாக்கு வங்கியில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை. இது திமுக தலைமைக்குத் தனது சொந்த பலத்தின் மீது அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியத்துவத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்
அதே நேரத்தில், ஆளும் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, ஆட்சி அதிகாரத்திலும் தேர்தல் களத்திலும் எதிர்பார்த்த முக்கியத்துவத்தைப் பெற முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரக் களங்களிலேயே தவெக தலைமைக்கும் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவியது. மேலும், இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிக இல்லாமல் திமுக தனியாகவே அடித்து துவம்சம் செய்துவிட்டது என்ற கருத்து பரவலாகப் பேசப்படத் தொடங்கியது.
உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான எதிர்ப்பு
இதனால் சுதாரித்துக் கொண்ட திருமாவளவன், தவெக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது மீண்டும் திமுக பக்கம் நகர்வதா என்ற குழப்பத்தில், திமுகவின் மூத்த நிர்வாகிகள் வழியாக மீண்டும் ஒரு புதிய உடன்படிக்கைக்கான தூது விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல் திமுக தலைமையின் முக்கிய முடிவெடுக்கும் இடத்திற்குச் சென்றபோது, உதயநிதி ஸ்டாலின் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் முதிர்ச்சியற்ற போக்கு
"ஆளுங்கட்சிப் பக்கம் சென்றுவிட்டு, அங்கும் நிலைக்க முடியாமல் மீண்டும் திமுகவை நோக்கி வருவதும், பின்னர் திமுகவை விமர்சிப்பதும் அரசியல் முதிர்ச்சியற்ற போக்கு" என்று திமுக தரப்பில் காரசாரமாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், "விசிக போன்ற கட்சிகளின் தயவே இல்லாமல் நமது கட்சித் தொண்டர்கள் இடைத்தேர்தலில் காட்டிய வாக்கு பலமே இதற்குச் சான்று; இனி எந்தச் சமரசமும் செய்துகொண்டு அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்க்கத் தேவையில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆளும் தவெக கூட்டணியில் முழுமையான நிம்மதி கிடைக்காமலும், பழைய கூட்டணிக் கட்சியான திமுக கதவை முழுமையாக அடைத்துவிட்டதாலும், விசிகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
