விசிக மாநாட்டில் சமூக விரோதி? சிறுத்தை சொன்ன பரபர புகார்! அப்படியெல்லாம் இல்லை.. டாட் வைத்த திருமா!
சென்னை: உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டில் திருமாவளவனை தாக்க சமூக விரோத கும்பல் ஊடுருவியதாகவும், திருமாவளவன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட கும்பல் செயல்பட்டதாகவும் கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில் தனி பெரும்பான்மை கிடைக்காதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக விசிகவின் 2 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.

அக்கட்சியின் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராகவும் உள்ளார். தேர்தல் முடிவடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டார் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன்.
விசிக மாநாடு
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு உளுந்தூர்பேட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் மாநாட்டில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றது. விஜய் பாணியில் ராம்ப் வாக் அமைக்கப்பட்டு விசிக தலைவர் திருமாவளவன் ஊர்வலமாக மேடையை நோக்கி வந்தார்.
தள்ளுமுள்ளு
அப்போது மாநாட்டு மேடையில் தொண்டர்கள் அதிக அளவில் ஏற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்கள் மயக்கம் அடைந்ததோடு, திருமாவளவனே சிறிது நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். மேலும் மேடையிலும் அதிக அளவில் தொண்டர்கள் திரண்டதால் மாநாடு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்தது. மேலும் மாநாட்டு மேடையில் திருமாவளவன் அழுத்தப்படுவது போன்று சில இடங்களில் தாக்கப்படுவது போன்று வீடியோக்கள் வெளியானது.
திருமாவளவன்
மாநாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கரூரில் ஏற்பட்டது போல உளுந்தூர்பேட்டை மாநாட்டில் என் நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் விரைவாகவே மாநாட்டை முடித்துக் கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில், மாநாடு நிறைவடைந்து ஒரு வாரத்தை கடந்திருக்கும் இந்த சூழலில் திடீரென விசிகவினரின் ஒரு புதிய புகார் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சதி புகார்
கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் விசிக செங்கல்பட்டு ஆவண மைய மாவட்ட அமைப்பாளரான ராஜா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திடீரென ஒரு புகார் ஒன்றை அளித்தார். அதில் நடந்து முடிந்த விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்றும், விசிக தலைவர் திருமாவளவனை தாக்க முயற்சி மேற்கொடுக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.
சமூக விரோதி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் இயற்கையானது அல்ல எனவும், யாரோ ஒரு சமூக விரோதி திட்டமிட்டு தூண்டிவிட்டு பல நூறு பேரை ஒரே நேரத்தில் மேடையில் ஏற்றி செயற்கையான நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர். மேலும், திருமாவளவனை தாக்கும் நோக்கில் முகம் தெரியாத சிலர் ஈடுபட்டனர் எனவும், அவர்கள் தாக்கும் வகையான சில வீடியோ ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும், அதை வைத்தே தற்போது புகார் அளித்துள்ளோம் என்றார்.
திருமாவளவன் விளக்கம்
ஒரு கட்சியின் மாநாட்டில் தலைவரை தாக்கும் நோக்கில் திட்டமிட்டு நெரிசல் உருவாக்கப்பட்டதாக வீடியோ ஆதாரங்களுடன் விசிகவினர் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக மனம் திறந்து இருக்கிறார் திருமாவளவன். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கவில்லை. மேடையில் 400 பேருக்கு இருக்கைகளை போட சொன்னது நான் தான், 400 பேரைத் தாண்டி அதிக நபர்கள் மேடையில் ஏறியதால் தான் நெரிசல் ஏற்பட்டது" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
