என் உயிரின் உயிரான சிறுத்தைகளே.. இன்று இரவு முக்கிய அறிவிப்பு! “மண்டல பொறுப்பு”: திருமாவளவன் மெசேஜ்!
சென்னை: கட்சியின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று இரவு அறிவிக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவில் புதிதாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பொறுப்புகளை பெற உள்ளது யார் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னோட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. முக்கிய கட்சிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், விசிகவில் இன்று மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே! 26-07-2023 புதன் கிழமை இரவு மண்டல நிர்வாகப் பொறுப்பாளர்களின் பட்டியலும் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர்களில் மாவட்டச் செயலாளர்களின் பட்டியலும் முதற்கட்டமாக அறிவிக்கப்படும். இதர பொறுப்புகளான மாவட்டப் பொருளாளர், மாவட்டத் துணை செயலாளர்கள், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆகியவற்றின் பட்டியல் அடுத்த கட்டமாக அறிவிக்கப்படும்.
பின்னர் துணைநிலை அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான பட்டியல் அடுத்தடுத்து அறிவிக்கப்படும். மண்டல நிர்வாகம் என்பது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் அடிப்படையான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்டதாகும்.
ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் முகாம் நிர்வாகக் குழுக்களை நியமித்தல், வாக்குச் சாவடிக் குழுக்களை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் முதலிய பணிகள் யாவற்றையும் மாவட்ட நிர்வாகத்தை முன்னிறுத்திச் செய்தல் போன்ற அரும்பணிகளை ஆற்றும் அதிகாரம் பெற்ற மண்டல நிர்வாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அதற்கு ஏதுவாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தை மட்டும் மூன்று மண்டலங்களாகவும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை ஒரு மண்டலமாகவும் பிற 34 மாவட்டங்களையும் இரண்டு வருவாய் மாவட்டங்கள் ஒரு மண்டலம் என 17 மண்டலங்களாகவும் நமது கட்சி நிர்வாகத்துக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மொத்தம் 21 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல செயலாளர் ஒருவர், மண்டலத் துணை செயலாளர்கள் மூவர் என மொத்தம் நால்வர் நியமிக்கப்படுவர். இந்த மண்டல நிர்வாகப் பொறுப்பாளர்களின் பட்டியலும் மாவட்டச் செயலாளர்களின் பட்டியலும் நாளை இரவு அறிவிக்கப்படும்." என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications