ஸ்டாலின் சொன்ன “குட் நியூஸ்”.. சென்னை வெள்ளத்துக்கு “நோ”! தனியார் வானிலை தகவலையும் பயன்படுத்த முடிவு
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்முறை சென்னையில் வெள்ளம் இருக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழையும் கொட்டித்தீர்ப்பது வழக்கம்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும், வட கிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிகம் பொழியும்.

வடகிழக்கு பருவமழை
கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது தென்மேற்குப் பருவமழை காலம் முடிந்து வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பெரு வெள்ளம்
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த காலங்களில் பெரு வெள்ளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதேபோல் மோசமான புயல்களும் தாக்கியுள்ளன. கடந்த ஆண்டும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

அரசு நடவடிக்கை
இந்த ஆண்டு வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்கூட்டியே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகளை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. அத்துடன் புதிய வடிகால்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி இருந்தது.

முதலமைச்சர் நம்பிக்கை
இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரில் இந்த முறை மழைநீர் தேங்காது என்று ஓரளவு நம்புகிறேன். தனியார் வானிலை ஆய்வு மைய தகவலையும் பெற்று ஒப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications