'அன்னம் காகமாகி விடாது' காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்- வைரமுத்து ட்விட்
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்துச்செய்தி விவாதத்தை கிளப்பி விட்டு இருந்த நிலையில், கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது. காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செய்தனர்.
வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மரியாதை செய்தார். அதேபோல், சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.

பாஜக தலைவர் பலரும் வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள், என்று குறிப்பிட்டு உள்ளார். பாஜக தலைவர் பலரும் திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருவள்ளுவரைப் போற்றுவோம்
அதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ''சிறப்பு மிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில் வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டு இருந்தார்.

காவி உடை தரித்தவராக..
ஆனால், அண்ணாமலை வெளியிட்ட திருவள்ளுவர் படம்தான் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. திருவள்ளுவரின் வழக்கமான தோற்றத்தை மாற்றி காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பாஜக தமது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த 2020-ல் வெளியிட்டது. இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் பாஜகவினர் காவி உடை திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்
தற்போது அண்ணாமலை இதே புகைப்படத்தை பயன்படுத்தி ட்விட் பதிவு செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான பதிவுகள் அதிகரித்தன. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது வெளியிட்ட ட்விட் பதிவில், "கறுப்புச் சாயம் அடித்தால், அன்னம் காகமாகி விடாது. காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்" எனக் கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்னம் காகமாகி விடாது
பெசன்ட் நகரில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினோம். பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார். துணைவேந்தர் திருவாசகம் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர் "கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது. காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்" என்றேன்" என்று பதிவிட்டுள்ளார். திருவள்ளுவர் காவி உடை தரித்து இருப்பது போல படத்தை அண்ணமாலை வெளியிட்ட படம் விவாதப்பொருளான நிலையில், வைரமுத்துவின் இந்த ட்விட் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மக்கள் மன்றம், நீதி மன்றம், சிறைக் கூடம்
முன்னதாக வைரமுத்து வைகோவின் பரம்பரை இல்லத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தகவலையும் தனது ட்விட் பதிவில் தெரிவித்து இருந்தார். வைரமுத்து வெளியிட்ட ட்விட் பதிவில், கலிங்கப்பட்டியில், வைகோவின் பரம்பரை இல்லத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டோம் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உடனிருந்தார் "மக்கள் மன்றம், நீதி மன்றம், சிறைக் கூடம் மூன்றிலும் தன் வாழ்க்கையைச் செலவழித்தவர் வைகோ" என்றேன்" எனத்தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications