அதிமுகவில் பிளவு.. எம்எல்ஏக்கள் சிலர் தவெகவுடன் போக ஆசைப்படுறாங்க.. டிகேஎஸ் இளங்கோவன் பரபர பேச்சு
சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் சிலர் தவெகவுடன் போக ஆசைப்படுறாங்க.. என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.. மேலும் அவர் கூறுகையில், "பெரும்பான்மை இல்லாமல் ஆளுநர் எப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும். அதனால்தான், பெரும்பான்மையை காட்டுங்கள்.. பிறகு வாருங்கள் என்று கூறியுள்ளார்" என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தவெக பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார் விஜய். ஆனால் ஆளுநரும் விஜய்யை ஆட்சி அமைக்க தற்போது வரை அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில் விஜய்க்கு பெரும்பான்மை இருந்தால் தானே ஆளுநர் அழைக்க முடியும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பெரும்பான்மை இல்லாமல் எப்படி அழைக்க முடியும்
விஜய்க்கு போதிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இல்லை. அதுதான் பிரச்சினையாக உள்ளது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இன்னும் குறைந்தபட்சம்12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த நிலையில் அவர்கள் எண்ணிக்கை 112 ஆக உள்ளது.
அவர்களுக்கு இன்னும் 6 -7 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறார்கள். அந்த எண்ணிக்கையை பெற முயன்று வருகிறார்கள். பெரும்பான்மை இல்லாமல் ஆளுநர் எப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும். அதனால்தான், பெரும்பான்மையை காட்டுங்கள்.. பிறகு வாருங்கள் என்று கூறியுள்ளார். எழுத்து பூர்வமாக அதை அவர்கள் காட்ட வேண்டும். காங்கிரஸ் தனது சொந்த தவறுகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் தோற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியை வழிநடத்துபவகள் தங்களின் சொந்த நலன்களை மட்டும் பார்க்கிறார்கள். கட்சியின் நலனை பார்ப்பது இல்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படுகிறது. கேரளாவில் வெற்றி என்பது வித்தியாசமானது. அது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு உதவாது.
அதிமுகவில் பிளவு உள்ளது
அதிமுகவிலும் பிளவு உள்ளது. அதிமுகவில் ஒரு தரப்பினர் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். பார்க்கலாம். விசிக மற்றும் இடதுசாரிகளை பொறுத்தவரை அவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இன்று பார்க்க வந்தனர். நேற்று கூட பார்த்தனர்" என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில், அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க. ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியது. இதில் உடனடியாக காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்தது. ஆனால் மற்ற கட்சிகள் அதில் எந்த முடிவையும் அறிவிக்க வில்லை. அவர்கள் ஆலோசனை செய்தே முடிவு எடுக்கப்படும் என்றே தெரிவித்து விட்டனர்.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தவெக அணுகியதாக தெரிகிறது. அதே போல் அதிமுகவின் ஆதரவையும் தவெக . கேட்டதாகவும், அதற்கு அ.தி.மு.க. சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இன்று தனது கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேபி முனுசாமி அளித்த பேட்டியில் தவெகவிற்கு ஆதரவு இல்லை என்று அறிவித்தார்.
ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் காத்திருக்கும் நிலையில் அவரும் தற்போது வரை அழைப்பு விடுக்கவில்லை. விஜய்க்கு பெரும்பான்மை இல்லை என்பதால் ஆட்சி அமைக்க தாமதம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில்தான் திமுக செய்தி தொடர்பாளர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவலை கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications