மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம்
சென்னை: தமிழக அரசியலில் பெண்களின் வாக்கு வங்கி அதிகரித்தாலும், வேட்பாளர் தேர்வில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 2.89 கோடி பேர் பெண்கள் ஆவர். இதில் 214 தொகுதிகளில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளார்கள். ஆனால் ஆளும் கட்சியான திமுக, மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய கூட்டணிகளில் 10% மட்டுமே பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைக் களமிறக்குவதில் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன

வாக்காளர் புள்ளி விவரம்:
மொத்தமுள்ள 5.67 கோடி வாக்காளர்களில், 2.89 கோடி பேர் பெண்கள், 2.77 கோடி பேர் ஆண்கள். அதாவது 214 தொகுதிகளில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் தான் அனைத்து கட்சிகளுமே பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும், பண உதவிகளையும் அறிவிக்கின்றன. குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டததை அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே அறிவித்துள்ளன. ஆனால் சீட் கொடுப்பதில் அந்த ஆர்வம் தெரிவதில்லை. கட்சிகள் வாரியாகப் பெண் வேட்பாளர்கள் விவரங்களை பார்ப்போம்.
திமுக கூட்டணி: மொத்தம் 10.25% இடங்களை மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக: 164 இடங்களில் 18 பெண்களுக்கு (11%) வாய்ப்பளித்துள்ளது.
காங்கிரஸ்: 28 இடங்களில் 2 பெண்களுக்கு (7.14%) மட்டும் வாய்ப்பு.
விசிக: தனது 8 இடங்களில் 2 இடங்களை (25%) பெண்களுக்கு ஒதுக்கி முன்னிலை வகிக்கிறது.
சிபிஎம் : 5 இடங்களில் ஒரு பெண்ணை நிறுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணி: சுமார் 11.5% இடங்களில் பெண்களை நிறுத்தியுள்ளது.
அதிமுக: 167 இடங்களில் 19 பெண்களுக்கு (11% மேல்) வாய்ப்பளித்துள்ளது.
பாஜக: 27 இடங்களில் 5 பெண்களுக்கு (18.5%) வாய்ப்பு.
பாமக: 18 இடங்களில் 3 பெண்களுக்கு (16%) வாய்ப்பு.
தனித்து நிற்கும் நாம் தமிழர் மற்றும தவெக கட்சிகள்:
சீமானின் நாம் தமிழர் கட் 2021-ம் ஆண்டைப் போலவே இம்முறையும் 116 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர் எனச் சரியாக 50% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கி தனித்து நிற்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய்யின் கட்சி 24 பெண்களுக்கு (10.25%) வாய்ப்பளித்துள்ளது.
2021 தேர்தலை விட (திமுக 11, அதிமுக 17 பெண்கள்) தற்போது எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தாலும், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை விட இது மிகவும் குறைவாகவே இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் (பஞ்சாயத்து மற்றும் நகராட்சி) பெண்களுக்கு 50% வரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது . இதனால் அடிமட்ட அளவில் பல பெண் தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள். ஆனால், சட்டம் இயற்றும் இடங்களான சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருப்பது ஒரு பெரிய இடைவெளி என்பது கசப்பான உண்மை. பெண்களின் பிரதிநிதித்துவம் ஏன் 33% அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.












Click it and Unblock the Notifications