1% கூட தேறாத இ.டி ரிப்போர்ட்.. சட்டசபையில் விஜய் வாசித்தது எல்லாம் புஸ்ஸ்ஸ்? டேட்டாவை பாருங்க
சென்னை: "என் மேஜையில் எதிர்க்கட்சி தொடர்பான மூன்று முக்கிய ஃபைல்கள் இருக்கின்றன; அதைத் திறக்கப் போகிறேன்" என்று ஒரு வாரமாக அதிரடி பில்டப் கொடுத்துவிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் வாசித்த ஆவணங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் நகைச்சுவையாகப் பார்க்கப்படுகின்றன.
ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் இருக்கும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய விசாரணை அறிக்கையை எடுத்துப் பேசுவார் என்று பார்த்தால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய சர்காரியா கமிஷன் அறிக்கையையும், மத்திய அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளையும் அவையில் வாசித்துக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தரவுகளும், இ.டி-யின் லட்சணமும்!
திமுக ஆட்சியில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். ஆனால், அவர் ஆதாரமாகக் காட்டும் அதே அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை என்ன என்பதை அண்மையில் மத்திய அரசே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புள்ளிவிவரங்கள் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் அளித்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் அமலாக்கத்துறை நாடு முழுவதும் பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 4,622. ஆனால், இதில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 43 மட்டுமே.
அதாவது, அமலாக்கத்துறை தொடுக்கும் மொத்த வழக்குகளில் தண்டனை விகிதம் என்பது வெறும் 0.93% மட்டுமே. ஒரு சதவீதத்தைக்கூட எட்ட முடியாத, நீதிமன்றங்களால் ஊர்ஜிதம் செய்யப்படாத இத்தகைய பலவீனமான குற்றச்சாட்டுகளை, ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் சொந்த சட்டமன்றத்திலேயே பெரும் "ஆதாரம்" போல முழங்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மோடி பாணி நேரு... விஜய் பாணி சர்காரியா!
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, தற்காலப் பொருளாதாரச் சிக்கல்களுக்கோ அல்லது மக்கள் பிரச்சினைகளுக்கோ நேரடியாகப் பதில் சொல்ல முடியாதபோது, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நேருவின் காலத்தை இழுத்துப் பேசுவது வழக்கம். அதே பாணியில், முதல்வர் விஜய் தன் ஆட்சியில் இருக்கும் டிவிஏசி அமைப்பின் புதிய ஆவணங்களை வைக்கத் துப்பில்லாமல், 1976-ல் அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.
வீராணம் குடிநீர் திட்டத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திடம் 2.5% கமிஷன் கேட்டதாக 50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிக்கையை வாசிப்பதும், இன்னொருபுறம் 1 சதவீத தண்டனை விகிதம் கூட இல்லாத அமலாக்கத்துறையின் முதற்கட்ட அனுமானங்களை வாசிப்பதும் ஆளுங்கட்சியின் அரசியல் பலவீனத்தையே அம்பலப்படுத்துகிறது.
கூட்டணிக் காங்கிரஸ் மீது வீசப்பட்ட பூமராங்!
இதைவிட விநோதம் என்னவென்றால், இதே அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி முதல் மாநில அளவிலான தலைவர்கள் வரை நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்து வைத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோ தவெக-வுடன் கூட்டணியில் இயங்குகிறது.
அமலாக்கத்துறை வைக்கும் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மையானவை என்றால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை போட்டிருக்கும் வழக்குகளை முதல்வர் விஜய் ஆதரிக்கிறாரா? எதிர்க்கட்சியான திமுகவை மிரட்டுவதற்கு இ.டி-யின் பெயரைத் தூக்கிப் பிடிப்பதும், அதே அமைப்பு கூட்டணிக் கட்சிகள் மீது நடத்தும் சோதனைகளைக் கண்டு மவுனம் சாதிப்பதும் பச்சையான இரட்டை வேடம் அன்றி வேறென்ன?
சாம்பிளே சொதப்பல்... 3 ஃபைல்கள் எப்போது?
"அந்த மூன்று கோப்புகளையும் திறப்பதற்கு முன்னால் ஒரு சாம்பிள் பார்ப்போம்" என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால், அவர் காட்டிய மாதிரியே அரை நூற்றாண்டு பழைய வரலாறாகவும், 0.93% மட்டுமே வெற்றி விகிதம் கொண்ட மத்திய அமைப்பின் அறிக்கையாகவும் அமைந்திருப்பது எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.
மாநிலத்தின் முதலமைச்சராக அமர்ந்திருப்பவர், அரசியல் மேடைகளில் பேசுவது போல ஊகங்களையும் பழைய நாளிதழ் செய்திகளையும் வாசித்துக் கொண்டிருக்காமல், தன் கையில் இருக்கும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் திடமான ஆதாரங்களை எப்போது அவையில் வைப்பார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
