Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்மணி எழுதிக் கொடுத்த சின்ன ‘சீட்டு’.. படித்தபோதே புது தெம்பு.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம்.

அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜூன் 28 மாலை 4 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டேன். வழியெங்கும் மக்களின் வரவேற்பு உற்சாகத்தையும் ஊக்கத்தையும், ஓய்வின்றி உழைப்பதன் உன்னதத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

 வாழ்நாளில் பார்த்திராத கூட்டம்

வாழ்நாளில் பார்த்திராத கூட்டம்

ஜூன் 29 அன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, வழியெங்கும் அலையலையாய் நிறைந்திருந்தன மனிதத் தலைகள். புன்னகை தவழும் முகத்துடன் கழகத்தினருடன் பொதுமக்களும் நிறைந்திருந்ததைப் பார்த்து, பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னிடம் வாகனத்தில் சொன்னது, "நான் வாழ்நாளில் பார்த்திராத கூட்டம்" என்று, அந்த அளவு உணர்ச்சி அலை! பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவை கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்ட காரணத்தால், கழகத் தோழர்கள் தங்கள் குருதியுடன் கலந்த கொள்கை உணர்வைக் காட்டும் வகையில் கருப்பு-சிவப்புக் கொடியை அசைத்து வரவேற்பளித்தனர். கழகத்தின் சாதனைகளை விளக்கும் வகையிலான வரவேற்புகளையும் கண்டு மகிழ்ந்தேன். மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் விளைவித்துள்ள சமூகப் புரட்சியை வெளிப்படுத்தும் வகையிலான வரைபடத்துடன் பெண்கள் திரண்டு நின்று நன்றி கலந்த வரவேற்பளித்தனர். எந்நாளும் எந்நேரமும் நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் வகையில் செம்மொழிப் பூங்கா போன்ற வடிவமைப்பை உருவாக்கி வரவேற்பு தந்தனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி - அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகுத்ததைப் போற்றும் வகையில் இத்திட்டத்தால் அர்ச்சகரானவர்கள் கோபுரம் போன்ற வடிவமைப்பின்கீழ் ஒரு குழுவாக நின்று வரவேற்பளித்தனர்.

 உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே

உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே

திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ. அவர்களும் மிகச் சிறந்த முறையில் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கி மகிழ்ந்தேன். சில வாரங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது. ஓயாத உழைப்பினால் உடல்நிலையில் ஏற்பட்ட சிறிது பாதிப்பு காரணமாக அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி, இப்போது நடைபெற்றது. பொதுவாக, அரசு நிகழ்ச்சி என்றாலும் அதற்கான பயண வழியில் வரவேற்பு என்றாலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்வரிடம் அளித்து, "எனக்கு இதைச் செய்து கொடுங்க" என்றுதான் கேட்பார்கள். ஆனால், திருப்பத்தூர் நிகழ்வில் சந்தித்த பொதுமக்கள் பலரும், "உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே, நல்லாயிட்டீங்களா? உடம்பை நல்லா பாத்துக்குங்க. கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்க" என்றுதான் அக்கறையுடன் தெரிவித்தனர். உடல்நலன் காக்கும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 சின்ன சீட்டு

சின்ன சீட்டு

திருப்பத்தூர் மாவட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்தபோது, நத்தம் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரி பிரதீஷ் என்ற பெண்மணி மிகச் சின்ன அளவிலான ஒரு சீட்டைக் கொடுத்தார். அதில் என்ன கோரிக்கை எழுதப்பட்டிருக்கிறது என்று நான் ஆவலுடன் பிரித்தால், "சாமை உணவு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா. காய்ச்சல் வராது" என்று எழுதியிருந்தார். அதைப் படித்தபோதே உடம்புக்குப் புதிய தெம்பு வந்தது போன்ற உணர்வு.

ஜூன்-30 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்றபோது வழியெங்கும் வரவேற்பு. பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், குழந்தைகள் திரண்டு நின்று உற்சாகமாகக் கையசைத்தனர். அதுபோலவே கல்லூரி மாணவர்களும் அன்பை வெளிப்படுத்தி மலர்களைக் கொடுத்து வரவேற்பு தந்தனர். மாணவர்களைப் பார்த்ததும் எனது முகமலர்ச்சி இன்னும் கூடுதலானது. விழா நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காப்பகப் பள்ளியைப் பற்றி அறிந்து, திடீரென அதனைப் பார்வையிடச் சென்றேன். நீண்ட காலம் சிறார் சீர்திருத்தப் பள்ளியாக இருந்து, தற்போது ஆதரவற்ற மாணவர்களுக்கான காப்பகப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது. அங்கு சென்றபோது, கண்காணிப்பாளர் விடுப்பில் இருப்பதையும், காப்பகப் பொறுப்பாளர் வரவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவிட்டு, காப்பகப் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்றேன். வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியையும் பாடம் பயின்ற மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வகுப்பு நிலவரம், சாப்பாடு சரியாக இருக்கிறதா, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாம் அவர்களிடம் கேட்டேன். அந்தக் காப்பகப் பள்ளியை ஆய்வு செய்து முடித்தபிறகு, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள காப்பகப் பள்ளிகள் அனைத்தையும் மேம்படுத்தும் வகையிலான செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.

 மிரண்டு போனேன்

மிரண்டு போனேன்

கரூரில் பயனாளிகளுக்கான நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றபோது சற்று ‘மிரண்டு'தான் போனேன். பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, பயனாளிகள் அமர்ந்துள்ள பகுதிக்கு நடந்து சென்று, முகம் பார்க்கும் வகையில், அவர்களின் அன்பைப் பெறுவது வழக்கம். கரூர் நிகழ்வில் ஒட்டுமொத்தமாகப் பயனாளிகள் மட்டுமே நிறைந்திருந்ததுபோல அவ்வளவு பெரிய எண்ணிக்கை. அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் நடந்து வருவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டன. ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். காலையில் நேர நெருக்கடியால் தவிர்க்கப்பட்ட ‘வாக்கிங்'கை நிகழ்ச்சி வளாகத்தில் நிறைவேற்றச் செய்துவிட்டார் மாவட்ட அமைச்சர்.

கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய். விருந்தினர் விடுதியில் சந்தித்த தொழிலதிபதிர்கள் - உழவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் சிலவற்றை அறிவிப்புகளாகவும் விழா மேடையிலேயே அறிவித்தேன்.

 மாணவிகள் செல்ஃபி

மாணவிகள் செல்ஃபி

எழுச்சியான அந்த நிகழ்வை முடித்துவிட்டு, புறப்பட்டு வந்தபோது வழியெங்கும் மக்கள் அலை. பெண்கல்வி போற்றும் கழக அரசின் முத்தான திட்டமான, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டத்திற்குப் பதிவு செய்திருந்த மாணவிகள் வரிசையாகக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, அவர்கள் நின்ற தூரம்வரை நடந்து சென்று நலன் விசாரித்தேன். படிப்பால் ஒருவர் அடையக்கூடிய முன்னேற்றத்தையும், பெண்கல்விக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினேன். மாணவிகள் ஆர்வமாகப் செல்பி எடுத்துக் கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட எல்லையைத் தொட்டதும் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி அன்பான வரவேற்பை வழங்கினார். அங்கிருந்து சிறிது தொலைவு சென்றதும் நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லைத் தொடங்கிவிட்டது. மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பெரும்படையைத் திரட்டிய இளவரசன்போல கழகத்தினரையும் பொதுமக்களையும் திரளச் செய்து, ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திற்கு எள் விழுந்தால் எண்ணெய்யாகிவிடும் என்கிற அளவிற்கு இடைவெளியே இல்லாமல் மக்கள் கடலில் மிதக்கச் செய்திருந்தார்.

 மக்கள் கடல்

மக்கள் கடல்

மாவட்டப் பொறுப்பை அவரிடம் வழங்கியபோது சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 தொகுதிகளிலும் கழகக் கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 100% வெற்றியை ஈட்டித் தந்தார். அந்த நம்பிக்கையில்தான், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டினை நாமக்கல்லில் நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதற்காகச் சென்ற நிலையில்தான், ஒட்டுமொத்த மாவட்டமும் திரண்டதுபோன்ற வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தார். 13 கி.மீ. தொலைவைக் கடப்பதற்கு ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.

சிறப்பான வரவேற்புடன் நாமக்கல்லுக்குச் சென்று, மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த நிலையில், என் மனதில் அருந்ததியின மக்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. குறிப்பாக, கழக அரசு எப்போதுமே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட அரசு. அதனால், எனது தனிச் செயலாளரிடம், "இங்கே அருந்ததியர் சமுதாயத்து மக்கள் வாழும் இடம் எது?" என்று கேட்டுத் தெரிவிக்கச் சொன்னேன். அவரும் விசாரித்து, சிலுவம்பட்டி என்ற பகுதியில் அருந்ததியர் சமூகத்தவர் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற விவரத்தை, தேநீர் நேரத்தில் என்னிடம் தெரிவித்தார்.

 ஸ்டாலின் மாதிரி இருக்காரு?

ஸ்டாலின் மாதிரி இருக்காரு?

வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி சிலுவம்பட்டிக்குச் சென்றேன். பாதை சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒரு மூதாட்டி எங்களைக் கடந்து சென்றார். பின்னால் வந்த பாதுகாப்புக் காவலர்களிடம், "யாரு அது... ஸ்டாலின் மாதிரி இருக்காரு?" என்று கேட்டார். அதை நானும் கேட்டேன். அந்த மூதாட்டியிடம், "நான் ஸ்டாலின்தாம்மா" என்றேன். அவருக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.

சிலுவம்பட்டியில் வசிக்கின்ற அருந்ததியர் மக்களுக்கும் அதே ஆச்சரியம்தான். அங்கே ஓர் இளைஞர், "தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3% உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்" என்றார் நன்றியுணர்வுடன். அவர் வீட்டுக்குச் சென்றேன். "டீ சாப்பிடுறீங்களா?" என்று அவரும் அவரது துணைவியாரும் அன்புடன் கேட்டார்கள். அங்கே டீ சாப்பிட்டேன். அந்த இளைஞரின் துணைவியார் எம்.ஏ., பி.எட். படித்திருக்கிறார். அதே தெருவில் ஓர் இளைஞர் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் எம்.பி..பி.எஸ் படிக்கிறார் என்று அறிந்தேன். கல்லூரியில் படிக்கும் இன்னும் இரண்டு மூன்று மாணவியரும் வந்தனர். எல்லாரும் ஆர்வத்துடன் வந்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.

 காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டும்

காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டும்

அந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதனையும் சாலை வசதியையும் உடனடியாக செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். பொதுவாக, அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வுசெய்வது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களின் வழக்கம். அரசு அலுவலகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளால் பயன்பெறக்கூடிய மக்களைத் தேடிச் சென்றால், எந்த அளவு பணிகள் நிறைவேறியிருக்கின்றன என்பதைக் காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டிவிடும் என்பதால் மக்கள் வசிக்கும் பணிக்கு அதிக அளவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

அதன்பின், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடக்கும் பந்தலுக்கு சென்றேன். சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகையை இடம்பெயர்த்து வைத்ததுபோல, வெள்ளை மாளிகையாக ஒளிர்ந்தது மாநாட்டு முகப்பு. உள்ளே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதுவதுபோன்ற சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பந்தலும் இருக்கைகளும் நேர்த்தியான முறையில் இருந்தன. பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும், ராஜேஸ்குமாரிடம் ஒரு சில மாற்றங்களை மட்டும் தெரிவித்து அதனை மேற்கொள்ளச் சொன்னேன். கொங்குப் பகுதியின் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை எங்கள் முன் வெளிப்படுத்தினர். அவர்களைப் பாராட்டிவிட்டுப் புறப்பட்டேன்.

 மாநாடு

மாநாடு

ஜூலை-3 காலை 9.30 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு என நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. 8.30 மணிக்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் வருகைத்தரத் தொடங்கியதால், 9 மணிக்கு பந்தல் நிறைந்திருந்தது. கழக முன்னோடிகள் உள்ளிட்டோர் பங்கேற்புடன் சரியாக 9.30க்கு மாநாடு தொடங்கியது. கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.யும் மிக நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்திருந்தனர்.

மாநாட்டுக் கருத்தரங்கில், ‘இதுதான் திராவிட இயக்கம்' என்ற தலைப்பில் வரலாற்றுப் பின்னணியோடு திராவிட இயக்கத்தின் தொண்டினை விளக்கினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். ‘பெண்களின் கையில் அதிகாரம்' என்ற தலைப்பில் மிகவும் எதார்த்தமான எடுத்துக்காட்டுகளுடன் அருமையாக உரையாற்றினார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா. ‘திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம்' என்ற தலைப்பில் கழக அரசின் சாதனைகளைப் ‘பவர்பாய்ண்ட்' வாயிலான புள்ளிவிவரங்களுடன் சிறப்பாக எடுத்துரைத்தார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். ‘தி.மு.க உருவாக்கிய நவீன தமிழ்நாடு' என்ற தலைப்பில் 50 ஆண்டு காலத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாகக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக உரையாற்றினார் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்ற தலைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் வலிமையையும் அந்த வலிமைமிகு அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதே கூட்டாட்சித் தத்துவம் என்பதையும் ஆற்றல்மிகு பேச்சால் எடுத்துரைத்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.

Recommended Video

    குறிப்பிட்ட கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க சொல்வதற்கு என்ன காரணம்? *Politics
     கடும் உழைப்பின் விளைவு

    கடும் உழைப்பின் விளைவு

    ஆட்சிப் பொறுப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்து நமக்கு வழங்கப்படவில்லை. கடுமையான உழைப்பின் விளைவு இது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையிலே ஆட்சியின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களாக வெளிப்பட்டு வருகிறது. ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன். உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளான கழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன். திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதன் சமூகநீதிக் கொள்கையையும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர்களன்றோ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்! கழக அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். பணிகள் காத்திருந்தன. வா..வா.. என என்னை அழைப்பது போலவே தோன்றியது. இவ்வாறு ஸ்டாலின் அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+