கசிந்ததா தமிழக தேர்தல் 2026 தேதி? மார்ச்-ல் வெளியாகுது மெகா அறிவிப்பு? ஆணைய குழு இன்று சென்னை விசிட்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று சென்னை வருகை தருகிறது.. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,,
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்த ஆய்வு பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது..

பொதுவாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்குத் தேர்தல் ஆணையக் குழு நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறையாகும்..
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தடைகின்றனர்..
ஸ்டார் ஓட்டல்
சென்னை வந்திறங்கும் அவர்கள் உடனடியாகத் தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு செல்கின்றனர்.. அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.. புதுச்சேரியில் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை முடித்துவிட்டு இரவு அங்கேயே தங்கும் இக்குழுவினர், நாளை காலை மீண்டும் சென்னைக்குத் திரும்புகின்றனர்..
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கும் தேர்தல் ஆணைய குழுவினர் பல்வேறு தரப்பினருடன் தொடர் ஆலோசனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்..
வருமான வரித்துறை
முதற்கட்டமாக தமிழக தலைமை செயலர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்து விவாதிக்க உள்ளனர்..
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளின் அதிகாரிகளுடன் பணப்பரிவர்த்தனை கண்காணிப்பு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது..
வழிகாட்டுதல்கள்
தேர்தல் ஆணையத்தின் இந்த ஆய்வில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் இக்குழுவினர் கேட்டறிகின்றனர்..
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த பிறகு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனாவுக்கு தேவையான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.. கடந்த வாரம் துணை ஆணையர்கள் ஆய்வு செய்த நிலையில், தற்போது தலைமை ஆணையரின் வருகை தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.. இக்குழுவினர் தங்களது பணிகளை முடித்துக்கொண்டு வரும் 27ம் தேதி மாலை டெல்லி திரும்புகின்றனர்..
நேரடி ஆய்வு ஆரம்பம்
இதற்கிடையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது..
திருத்த பணிகளுக்கு முன்பாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இப்போது இறுதி பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆகக் குறைந்துள்ளது.. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுத் தேர்தல் ஆணையக் குழுவின் நேரடி ஆய்வும் தொடங்குவதால் தமிழகத்தில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது..












Click it and Unblock the Notifications