இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ் தக்காளி விலை சட்டென்று குறைந்தது... கிலோ எவ்வளவு தெரியுமா
உச்சத்தில் இருந்த தக்காளி விலை சற்றே குறையத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சென்னை: இல்லத்தரசிகளே உங்களுக்கு நல்ல செய்தி, நேற்று வரை 160 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்துள்ளதால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். கடலூர் மாவட்டம் திருப்பாதிரி புலியூர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வடகிழக்குப் பருவமழையால் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி காய்கள் அழுகின. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்த காரணத்தால் விலை உச்சத்திற்கு சென்றது.
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

பண்ணை பசுமைக்கடைகள்
இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்தது. பலரும் வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர். ரேசன் கடைகளிலும் தக்காளி காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்திருந்தார்.

சென்னையில் குறைந்த தக்காளி
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால், தக்காளியின் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போட்டி போட்டு வாங்கிய மக்கள்
இதனிடையே கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளியை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

தக்காளி விலை எவ்வளவு
மதுரை மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளில் நாட்டு ரக தக்காளி பயிரிடப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 150 பெட்டி தக்காளி அறுவடை செய்த நிலையில் மழையால் தக்காளி அறுவடை குறைந்து விட்டது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய தினம் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video

விலை குறைவால் நிம்மதி
காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்தால், தக்காளியின் விலை குறையத் தொடங்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் சற்றே நிம்மதியடைந்தாலும், மேலும் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications