உலகின் விலை உயர்ந்த 5 கடிகாரங்கள் - அண்ணாமலை வாட்சால் நெருங்கவே முடியாது.. அடேங்கப்பா! இவ்ளோ கோடியா?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் அணிந்து இருந்த பெல் அண்ட் ராஸ் நிறுவனம் வெளியிட்ட ரஃபேல் சிறப்பு எடிசன் கை கடிகாரத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சை தொடர்ந்து வரும் சூழலில் 2022 ஆம் ஆண்டின் விலை உயர்ந்த 5 வாட்சுகள் எது என்று பார்ப்போம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி இருந்த வாட்ச் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8 லட்சம் என்று ஒரு தரப்பினரும், ரூ.5 லட்சத்துக்கு குறைவுதான் என்று மற்றொரு தரப்பினரும் பேசி வருகிறார்கள்.
தன்னை விவசாயியாக காட்டிக்கொள்ளும் விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையிடம் இவ்வளவு அதிக விலையில் வாட்ச் எப்படி கிடைத்தது? என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இதை விட பன்மடங்கு விலை அதிகம் உள்ள வாட்சுகள் உள்ளன. இதில் முதல் 5 வாட்சுகளை தற்போது பார்ப்போம்.

1. கிராஃப் டைமண்ட்ஸ் ஹால்லுசினேசன்
உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கை கடிகாரமாக இருப்பது கிராஃப் டைமண்ட்ஸ் ஹால்லுசினேசன் என்ற கடிகாரம். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.45 கோடியை தாண்டுகிறது. விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகத்தின் மூலம் இந்த கடிகாரத்தின் பிரேஸ்லெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் மீது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களை கொண்ட 110 கேரட் அரிய வகை வைரங்கள் பதியப்பட்டு உள்ளது.

2. கிராஃப் டைமண்ட் தி ஃபாசினேன்
கிராஃப் டைமண்ட் என்ற வைர நிறுவனத்தால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த கடிகாரத்தின் பெயர் ஃபாசினேசன். மேலே பார்த்தை ஹாலுசினேசன் கடிகாரத்தை விட இதில் உயர் ரக வெள்ளை நிற வடிவங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 152.96 காரட் வெள்ளை வைரங்கள் பதியப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் 38.13 காரட் வைர வளையமும் கடிகாரத்தின் நடுவில் இணைக்கப்பட்டு உள்ளது. அதை தனியாக கழற்றியும் பயன்படுத்தலாம். இதன் இந்திய மதிப்பு ரூ.33 கோடியை தாண்டுகிறது.

3. ப்ரெகுவெட் கிராண்ட் காம்பிலிகேஷன் மேரி அன்டோனெட்
இந்த கடிகாரம் சற்று வித்தியாசமானது. மேலே நாம் பார்த்ததைபோல் இது கை கடிகாரம் கிடையாது. இது ஒரு பாக்கெட் வாட்ச். வட்டமான தங்க பெட்டிக்குள் ஏராளமான கடிகார கியர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கடிகாரம் கண்ணாடியால் மூடப்பட்டு உள்ளது. பிரான்ஸ் ராணியான மேரி அன்டோனெட்டிங் முன்னாள் காதலரால் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1782 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கடிகார வடிமைப்பு பணிகள் 40 ஆண்டுகள் கழித்து 1827 ஆம் ஆண்டே நிறைவடைந்து உள்ளது. ஆனால், அந்த வாட்சை பார்ப்பதற்கு முன்பே ராணி மேரி தூக்கிலிடப்பட்டார். இந்த கடிகாரத்தின் இந்திய மதிப்பு ரூ.24 கோடிக்கு அதிகமாம்.

4. ஜேகர் - லீ கொல்சர் ஜோய்லெரீ 101 மான்செடே
ஜேகர் - லீ கொல்சர் ஜோய்லெரீ 101 மான்செடே எனப்படும் இந்த விலை உயர்ந்த கடிகாரம், 576 விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் நீலமணி எனப்படும் விலை உயர்ந்த சஃபையர் கற்களால் தயாரிக்கப்பட்டு டையலை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதை பாராட்டி அவருக்கு இந்த கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் ராணியின் கிரீடத்தை போன்றே இருக்கும். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.21 கோடிக்கும் அதிகம்.

5. சோப்பார்ட் 201 - காரட் வாட்ச்
உலகளவில் விலை உயர்ந்த கடிகாரங்களில் 5 வது இடத்தில் உள்ள சோப்பார்ட் 201 என்ற கடிகாரம். விலை உயர்ந்த பல நிறங்களை கொண்ட வைரங்களால் இந்த கடிகாரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 15 கார்ட் பிங்க் நிற வைரம், 12 காரட் நீல நிற வைரம், 11 காரட் வெள்ளை வைரங்கள் இதில் உள்ளன. அதுமட்டுமின்றி 163 காரட்டுகளை கொண்ட வெள்ளை மற்றும் மஞ்சள் வைரங்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.20.65 கோடி.












Click it and Unblock the Notifications