திருச்சி கிழக்கு தொகுதியில் யார் பணக்கார வேட்பாளர்? விஜய்க்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர்
திருச்சி: திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி, தவெக தலைவரும் நடிகருமான விஜய் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய 'ஸ்டார் தொகுதி' ஆகிவிட்டது. விஜய் போட்டியிடும் இந்த தொகுதியில் களத்தில் இருக்கும் முக்கிய வேட்பாளரின் சொத்து மதிப்பை பார்க்கலாம்..
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

2 தொகுதிகளில் விஜய் போட்டி
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியில் போட்டியிடுகிறார் விஜய். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விஜய் மீண்டும் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தவரின் வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்று விஜய் கருதுவதாகத் தெரிகிறது. இந்த தொகுதியில் தவெகவுக்கு 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனராம். இதை கருத்தில் கொண்டே இந்த தொகுதியை மலை போல நம்பி இறங்கி இருக்கிறாராம் விஜய்.
திருச்சி கிழக்கு - தொகுதி எப்படி?
திருச்சி கிழக்கு தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி 1 என அழைக்கப்பட்டு வந்த திருச்சி கிழக்கு தொகுதி, கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989 ஆம் ஆண்டுகளில் மலர்மன்னன், 1996, 2001 சட்டசபை தேர்தல்களில் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
கடந்த 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றார்.
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
வேட்பாளர்களின் சொத்து மதிப்பு
சொத்து மதிப்பில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். சுமார் 400 கோடிக்கு அதிகமான அசையும் சொத்துகளையும், சுமார் 220 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துகளையும் கொண்டிருப்பதாகவும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸூக்கு அடுத்ததாக தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்ற இடத்தையும் பிடித்திருக்கிறார் விஜய்.
2ஆம் இடத்தில் அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் சுமார் 23 கோடிகளுக்கு அதிகமான அசையும் சொத்துகளோடு; சுமார் 17 கோடிக்கு அதிகமான அசையா சொத்துக்களுடனும் திருச்சி கிழக்கு வேட்பாளர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ராஜசேகரன், திருச்சியில் பிரபலமான இந்திரா கணேசன் கல்வி குழுமங்களின் உரிமையாளர். நில வணிகம் மற்றும் விவசாயம் தனது பிரதான வருவாய் ஆதாரம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3ஆம் இடத்தில் திமுக வேட்பாளர்
திருச்சி கிழக்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ். 12 கோடிக்கு அதிகமான அசையும் சொத்துக்களையும், சுமார் 16 கோடிக்கு அதிகமான அசையா சொத்துகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் பிசினஸ் நடத்தி வருகிறார்.
திருச்சி கிழக்கு - வேட்பாளர்கள்
1. இனிகோ இருதயராஜ் - திமுக
2. ராஜசேகரன் - அதிமுக
3. சி. ஜோசப் விஜய் - தமிழக வெற்றிக் கழகம்
4. கிருஷ்ணசாமி - நாம் தமிழர் கட்சி
5. செ. நந்தகுமார் - அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
6. கோபிநாத் - புதிய தமிழகம்
7. ராயல் ராஜா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி
8. ஆனந்த் செல்வராஜ் - தேசிய மகா சபா கட்சி
9. கே. விஜய் - அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகம்
10. இளங்கோவன் - பகுஜன் சமாஜ் கட்சி
11. ஆர். முத்துக்குமார் - சாமானிய மக்கள் நலக் கட்சி
12. சுகுமார் - தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி
13. விஜயமோகனாஜி - விடியல் வளர்ச்சி பேரணி
14. கங்கை உலகநாதன் - சுயேட்சை
15. ராபர்ட் கிறிஸ்டி - சுயேட்சை
16. சார்லஸ் சகாயராஜ் - சுயேட்சை
17. கண்ணன் - சுயேட்சை
18. ராஜேந்திரன் - சுயேட்சை
19. செபாஸ்டியன் ஆனந்த் - சுயேட்சை
20. எஸ். பன்னீர்செல்வம் - சுயேட்சை













Click it and Unblock the Notifications