ஒருபுறம் சசிகலாவின் சுற்றுப்பயணம்.. மறுபுறம் அமமுகவினர் உடன் டிடிவி தினகரன் முக்கிய மீட்டிங்
சென்னை: அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி தினகரன் வரும் நவ.6ஆம் தேதி தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா வந்ததில் இருந்தே, தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் தேர்தலுக்கு முன், அரசியலில் இருந்து ஒதுக்கி இருப்பதாகக் கூறி ஷாக் தந்தார்.
அதே நேரம் தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் நடவடிக்கைகளை மெல்ல எடுக்க தொடங்கினார் சசிகலா.

மீண்டும் சசிகலா
முதலில் அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைப்பேசியில் பேசும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதிகளுக்குச் சென்ற அவர், மீண்டும் தமிழ்நாடு அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த அதிமுகவினரும், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் அளித்த பேட்டியும் இதையே காட்டுகிறது.

ஆலோசனைக் கூட்டம்
இந்தச் சூழலில் தென் மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, தொண்டர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். ஒரு புறம் சசிகலா தனது அரசியல் அத்தியாயத்தின் அடுத்த பாகத்தை எழுத தாயாராகி வரும் நிலையில், மறுபுறம் டிடிவி தினகரன் தனது அமமுக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். தனது மகளின் திருமணத்தை முடித்த கையோடு, அடுத்தகட்ட திட்டம் குறித்து அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

அறிக்கை
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடவும் லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

டிடிவி தினகரன்
சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 6.11.2021 முதல் கீழ்க்காணும் அட்டவணைப்படி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அம்மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச்செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
அதன்படி வரும் நவ. 6ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து நவ, 7ஆம் தேதி கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, அரியலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் நவ, 8ஆம் தேதித ஆலோசனை நடத்துகிறார். இதர மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் வரும் நவ. 7ஆம் தேதி ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மீட்டிங்
ஒருபுறம் அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சசிகலா முயற்சி எடுத்து வரும் நிலையில், மறுபுறம் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சசிகலாவின் தென்மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது அமமுகவினர் மட்டுமின்றி அதிமுகவினரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிடிவி தினகரன்
முன்னதாக, நேற்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைகளுக்கு அமமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்












Click it and Unblock the Notifications