சப் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர்! குமரியில் நடந்தது என்ன?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக நிர்வாகிகளால் காவல் நிலையத்தை முற்றுகை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த அரசின் மானிய விலை மண்ணெண்ணெயை ஏற்றிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு கொல்லங்கோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட்ராஜ் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்.

அங்கு நின்ற ஜெரோன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட்ராஜ்ஜை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வீடியோ எடுத்து, அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக உதவி ஆய்வாளர் டேவிட்ராஜ் கொடுத்த புகார் மீது கொல்லங்கோடு போலீசார் சரண் என்ற ஜெரோன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு கைது செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த தவெக நிர்வாகிகளும், கட்சியை சார்ந்தவர்களும் ஜெரோனை கைது செய்ய விடாமல் கொல்லங்கோடு காவல் நிலையதை முற்றுகை செய்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகை செய்தவர்களை காவல் நிலைய வளாகத்தில் இருந்து துரத்தி வெளியேற்றினர். குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு துணைப் போகக் கூடாது, காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து செய்ய கூடாது என தவெக கட்சியினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மண்ணெண்ணை கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை பணி செய்ய விடாமல் முற்றுகையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆளும் கட்சி நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு துணை போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.



Click it and Unblock the Notifications
