“வாபஸ் அரசு”.. அரசாணை வெளியிட்ட பிறகு எதிர்ப்பால் யூ-டர்ன்.. தவெக ஆட்சியில் தொடர்கதை!
சென்னை: "வாபஸ் அரசு" என விமர்சிக்கப்படும் அளவுக்கு, தவெக அரசு அரசாணை வெளியிடுவதும் கடும் எதிர்ப்பு காரணமாக அதை திரும்பப் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல், பல விவகாரங்களில் அரசாணையை வாபஸ் பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு.
முதல்மைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம், மேல்மா சிப்காட் நில எடுப்பு ஆகிய விவகாரங்களிலும் அரசாணைகளை திரும்பப் பெற்றுள்ளது தவெக அரசு.

அரசாணை
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொதுத் துறையின் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கீழ் வரும் தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையின்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல்துறை சித்ரவதை, விசாரணைக் கைதிகளின் மரணம், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகளையும் அரசியல் காரணங்கள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல் உள்ளிட்ட தகவல்களையும் ஆர்டிஐ-ன் கீழ் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
அரசாணை வாபஸ்
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தவெக அரசின் இந்த நடவடிக்கைக்குக் விஜய் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை RTI சட்டத்தின் கீழ் பெறுவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு உத்தரவைத் திரும்பப் பெறுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.
மேல்மா சிப்காட்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை தவெக அரசு திரும்பப் பெற்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக தவெக தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு நில எடுப்புக்கான அறிவிக்கை வெளியானது அரசியல் வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தற்போதைய தவெக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசிதழில் வெளியான அறிவிக்கையில், செய்யாறு தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக மேல்மா கிராமத்தில் 22.1600 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
திரும்பப் பெற்ற தவெக அரசு
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக தவெக குரல் கொடுத்திருந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியானது விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட மேல்மா கிராமத்துக்கான சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டது.
வாபஸ் - தொடர்கதை
அதற்கு முன்னதாக, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே ஒரு முக்கியமான பணி ஆணை வாபஸ் பெறப்பட்டது. முதலமைச்சர் விஜய்யின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவெக அரசுக்கு ஆதரவளித்த கட்சிகளே இதனை விமர்சித்தன. இதையடுத்து, இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. தவெக அரசில், சர்ச்சைக்குரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, கண்டனங்கள் எழுந்தால் திரும்பப் பெறுவது தொடர்கதையாகி வருகிறது. அரசின் கொள்கை முடிவு தான் அரசாணைகளாக வெளியிடப்படும், கொள்கை முடிவுகளில் சரியான யோசனை இல்லாமல் அவசரகதியில் வெளியிடுவதும், எதிர்ப்பு எழுந்தால் பின்வாங்குவதும் முறையான அரசுக்கு அழகல்ல என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
