அதிமுக கூட்டணியில் இணைவீர்களா? நேரடியாக பதிலளித்த தவெக தலைவர் விஜய்!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தவெக ஒருபோதும் இணையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராகத் தன்னை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ள விஜய், திமுகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடிகர் விஜய் நடத்தி வருகிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், தவெக சார்பாக மதுரையில் 2வது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கும் இந்த மாநாட்டின் பணிகளில் தவெக தலைவர் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக 500 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தவெகவினர் கூட உள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று நடத்தி வருகிறார். பின்னர் விஜய் சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்தே இதுவரை எந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருடன் விஜய் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார். அந்த கலந்துரையாடலில், எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தைக் கண்டும் கலங்குவது இல்லை. மாற்றத்தை நோக்கியே எனது பயணம் இருக்கிறது.
அதிமுக - பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. எந்தக் காரணத்தை கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அதேபோல் முதல்வர் வேட்பாளர் யாரென்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்ததை போல் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், ஏற்றுக் கொள்வோம். தவெகவின் ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும்தான்.
அதில் எந்த சமரசமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தவெக இம்முறை தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரியளவில் கூட்டணி அமைத்திருக்கும் சூழலில், விஜய் தனித்தே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தான் தவெக தொண்டர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications