ஏர்போர்ட் எட்டப்பர்களுக்கு ஏழரை சனியை பரிசளித்த ஏசுவின் வாரிசே.. விஜய் குறித்து தவெக எம்எல்ஏ
சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை கொடுத்தார். சட்டமன்றத்தில் தவெக திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவ்வபோது விஜயை பாராட்டி தவெக எம்எல்ஏக்கள் பேசுவர். இந்நிலையில் விஜயை ஏசுவின் வாரிசே என மதுரை தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் மதுரை கிழக்கு தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் பேசும்போது, "தமிழகத்தை சுரண்டி சுட்டெரித்த சூரியனுக்கு சூடுவைத்து சூராதி சூரரே. தமிழக உரிமைகளை அண்டை மாநிலங்களில் அடகு வைத்தவர்களுக்கு தமிழர்களை தவிக்க வைத்தவர்களுக்கு தண்ணி காட்டிய தளபதியே. அப்பாவின் அட்ராசிட்களை அடக்கி அரியணையில் ஏறிய அரிமாவே. பாபுவால் பகை முடித்து கொளத்தூர் மக்களுக்கு பாவ விமோட்சனம் அளித்த பாசத் தலைவரே. பாட்டில் பாலாக்களை பதற வைத்து என்று அவர் பேசும்போது சபாநாயகர் குறிக்கிட்டார்.

பாட்டில் பாலாக்களை
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், மாண்புமிகு உறுப்பினர். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். முதலமைச்சரும் என்னிடம் முதல்நாளே சொன்னார்கள். என்னைப்பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்த்துவிட்டு மக்களுக்கு பயனுள்ள கருத்துகளை கூறுங்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மானிய கோரிக்கையில் இதை பேச வேண்டாம். நீங்கள் மானிய கோரிக்கை பற்றி பேசுங்கள் என்று கூறினார்.
அதற்கு அவர், அண்ணன்கிட்ட மன்னிப்பு வேண்டுமானால் கேட்டு கொள்கிறேன். இரண்டே இரண்டு கருத்து சொல்லிக் கொள்கிறேன். பாட்டில் பாலாக்களை பதற வைத்து புறமுதுகிட்டு ஓட வைத்த மன்னாதி மன்னனே. பெண்களை பழித்த பால்டாயின் பாபாக்களுக்கு பாடம் புகட்டிய பனையூர் பகலவனே. குவாரிகளில் கொள்ளையடித்து குவித்த குறுநில மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய குழந்தை முதலமைச்சரே.
ஏசுவின் வாரிசே
விடியல் விடியல் என்று விண் அதிர கூச்சலிட்டு, வியர்வை சந்தி உழைக்கிற விவசாயிகளின் விளை நிலங்களை பிடுங்கியவர்களை வீதிக்கு வரவைத்த வீரத்திருமகனே. ஏர்போர்ட்டுக்கு ஏங்கிய எட்டப்பர்களுக்கு ஏழரை சனியை பரிசளித்த ஏசுவின் வாரிசே. பரிதவித்து கொண்டிருந்த பனையூர் மக்களுக்கு பாதுகாப்பளித்த பாதுகாவலரே. தங்க தலைவரே. கொளத்தூருக்கு கொத்து புரோட்டோ போட்ட நீங்கள், அப்படியே சேப்பாக்கம் போயிருந்தால் முட்டை புரோட்டா போட்டிருக்கலாம்.
பதவி வெறியால் பைத்தியம் பிடித்து ஜோக்கர்களின் ஜோலியை முடித்த அண்ணன் ஜோசப் விஜய்க்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். அம்புட்டு தான் பேரவை தலைவரே. கோச்சுக்காதீங்க" என்று பேசினார். அவரின் பேச்சை கேட்டு விஜய் வாய்விட்டு சிரித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
