ரோடு ஷோ SOP: முன்பு தாக்கல் செய்த வழக்கை, ஆட்சிக்கு வந்த பிறகு வாபஸ் பெற்றது தவெக!
சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை தமிழக வெற்றிக் கழகம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த திமுக ஆட்சியில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழ்நாடு அரசு, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அதனை அரசிதழில் வெளியிட்டது.
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக சார்பில் அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அவர் தனது மனுவில், 'ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகளில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை ஏற்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசின் பொறுப்புகள் அனைத்தும், அரசியல் கட்சிகளின் மீது திணிக்கப்படுவதாகவும் அவர் தன் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தவெக அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளை பரிசீலித்து, புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சி.டி.ஆர். நிர்மல் குமார் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Click it and Unblock the Notifications
