Low pressure areas: உருவாகிறது இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. இம்மாத இறுதியில் சம்பவம் தான்.. வெளுக்கப் போகுது மழை!
சென்னை: ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் எல் நினோ பாதிப்பு காரணமாக நடப்பு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
தமிழகம், புதுவை, கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே பெய்யும் எனவும் கணித்துள்ளது. மேலும் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்றும் கூறியது.
இந்நிலையில் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் இம்மாத இறுதிக்குள் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாத இறுதி வாரத்தில் காற்று சுழற்சிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
கனமழை வெளுக்கும்!
இது அடுத்தடுத்த நாட்களில் இம்மாத இறுதிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகக்கூடும். இதனால் தமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது. பருவமழை இன்று தொடங்கினாலும் நேற்றே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி என பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நேற்றே மழை கொட்டியது.
இன்றும் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தொடர்ந்து அடுத்த இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை மிக கனமழை பெய்யக்கூடும்
முன்னதாக வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை, "நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறியிருந்தது.




Click it and Unblock the Notifications
