மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரை வரை செல்ல மரப்பாதை.. திறந்து வைத்த உதயநிதி
சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதையை ஜனவரி 16ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் மிக அருகே சென்று, அலைகளில் காலை நனைத்து மகிழும் வகையில் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது மரப்பலகையால் ஆன பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பலகை பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று மாற்றுத்திறனாளிகள் கடல் நீரில் கால் நனைப்பதை கண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ககன்தீப் சிங் பேடி பேட்டி
பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வேகமாக செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இங்கு உள்ளது என்றார். மேலும் கடல் பரப்பிலும் தண்ணீரிலும் சுலபமாக செல்லும் வகையில் பிரத்தியேகமான மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜனவரி 16வரை நீட்டிப்பு
இந்த பிரத்தியேக பாதை மற்றும் சக்கரநாற்காலிக மூலம் சக்கர நாற்காலி இல்லாமல் வரும் மாற்றுத் திறனாளிகளும் கடல் தரப்பிற்கு சுலபமாக செல்லலாம் என கூறினார். இந்த நடைபாதை ஜனவரி 3ஆம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனவரி 16ம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிரந்தர நடைபாதைக்கு நடவடிக்கை
தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை நிரந்தரமான முறையில் அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் இதனை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications