“கட்சியா இல்லை Narcos கூடாரமா? போதைப்பொருள் கடத்தும் தவெகவினரை கட்டுப்படுத்துங்க” - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: "டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதைக் கடத்தும் தவெகவினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாகையில், அண்மையில் 135 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வருவாய் புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெகவின் முக்கிய நிர்வாகி பூபாலன் வீட்டிலேயே போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதைக் கலாச்சாரத்தை ஒழிப்பேன் என முழங்கிய முதல்வர் விஜய் ஆட்சியில் அவரது கட்சியினரே, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை தவெக நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் தவெகவின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் தவெகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
