விஜய்க்கு இல்லாத தெளிவு, திமுகவுக்கு மட்டும் எப்படி வந்தது? திருப்பரங்குன்றம் முள்வேலியில் திருப்பம்
சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இப்போது முள்வேலி அமைக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. தர்காவில் பிரியாணி சாப்பிடக்கூடாது என்று பிரச்சினை கிளப்புவது முதல், நவாஸ் கனியை அழைத்துச் சென்றது வரை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர்கோடீஸ்வரன். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்னதான் நடக்கிறது? முள்வேலி ஏன் போட வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.
South Beat சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசுக்கோ, முதலமைச்சருக்கோ முடிவெடுக்கும் அதிகாரம் பெருமளவில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இனிமேல் கோயில் நிர்வாகம் தொடர்பான முடிவுகளை அவர்கள்தான் கவனிக்கப் போகிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரம்
கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாடும், மலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடும் அரசின் கையிலிருந்து விலகியிருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாப்புப் படைக்கு மாதந்தோறும் செலவுகள் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட வேண்டும்?
ஆரம்பத்திலிருந்தே நான் கூறுவது ஒன்றுதான். இரு தரப்பினரிடமும் பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பாஜக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
நவாஸ் கனி பிரியாணி
எனக்கு இருக்கும் முக்கியமான கேள்வி, இந்தத் தீபத்தை அரசே ஏற்றிவிட்டு வந்திருக்கலாமே என்பதுதான். நவாஸ் கனி போன்றவர்களை அந்த பக்கமே அழைத்து செல்ல வேண்டாம்? அவரையெல்லாம் அழைத்துச் சென்று பிரச்சினையை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? தர்காவில் பிரியாணி சாப்பிடக்கூடாது, இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது என்று தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு, பிறகு தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்னொரு பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதன்பிறகு நயினார் நாகேந்திரன் போன்றவர்களை வீட்டுக் காவலில் வைப்பதால் என்ன பயன்? இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறுகிறார். எதற்காக? அமைச்சர் என்ன தவறு செய்தார்?
நிர்மல் குமார் - அரசாங்கம் அடமானம்
நிர்மல் குமாருக்கு இத்தகைய எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றன? அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர் என்பதாலா? அந்த அமைப்பின் சிந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மொத்த அரசாங்கத்தையும் அடமானம் வைத்துவிட்டீர்கள். இப்போது மலையின் கட்டுப்பாடு உங்கள் கையிலிருந்து போய்விட்டது.
அங்கே முள்வேலி அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எதற்காக முள்வேலி? நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம்? எங்களுக்குள் பிரிவினை கிடையாதே? நான் முருகர் கோயிலுக்கும் செல்வேன். தர்காவுக்கும் செல்வேன். மனம் சரியில்லாதபோது அங்கே சென்று துவா செய்வேன். இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.
முள்வேலி அமைத்துவிட்டால் எப்படி?
இப்போது முள்வேலி அமைத்துவிட்டால் நான் எப்படி அங்கே செல்வது? மலையிலிருந்து இறங்கி எங்கிருந்து சுற்றிச் செல்ல வேண்டும்? குழந்தைகள் நாளைக்கு அப்பா, தர்காவுக்கும் முருகர் கோயிலுக்கும் நடுவில் ஏன் வேலி இருக்கிறது என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
தீபம் ஏற்றுவதால் யாருக்குப் பிரச்சினை ஏற்படப்போகிறது? அதே நேரத்தில் அரசியல்வாதிகள் இதை ஊக்குவிப்பதால்தான் மக்கள் மத்தியில் பிரிவினை உருவாகிறது. என்னைப் போன்றவர்கள் இரண்டு இடங்களிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வார்கள். அதுதான் மத நல்லிணக்கம்.
விஜய் இந்த விவகாரத்தில் தெளிவான கொள்கை முடிவை எடுக்காமல் இருந்ததுதான் பிரச்சினை. திமுக ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. இனி தொகுதி மறுவரையறை போன்ற முக்கியமான பிரச்சினைகளில் தவெக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தர்கா - கோயில்
முன்பு நான் அங்கே சென்றபோது தர்காவிலும் கோயிலிலும் இயல்பான சூழல்தான் இருந்தது. அங்கே ஜமால் அண்ணன் இருப்பார். அவரைப் பார்த்து நலம் விசாரிப்பேன். அவர் என்னிடம் அன்பாகப் பேசுவார். அவரிடம் பிரியாணி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு முருகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வருவேன். என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நான் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று யாரும் பார்க்க மாட்டார்கள்.
இனி அந்தச் சுதந்திரம் இருக்குமா என்ற கவலை இருக்கிறது. இரு தரப்பினரும் சண்டை போட்டதால் நீதிமன்றம் தலையிட்டது. அதன்பிறகு முள்வேலி அமைக்கப்பட்டது என்று சொல்லப் போகிறோமா? அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கற்றுக்கொடுக்கப் போகிறோமா?
சீமான் கூட இந்த விவகாரத்தில் என்ன கூறினார்? நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். நமக்குள் பேசி சுமுகமான முடிவை எடுக்கலாம் என்றுதானே கூறினார். அதில் என்ன தவறு இருக்கிறது? அதுதான் அறிஞர் அண்ணா சொன்ன வழி.
திமுக, தவெக அணுகுமுறை
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே அரசியல் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.. கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும், அதிலிருந்து எப்படி அரசியல் ரீதியாக வெளியே வர வேண்டும் என்பதெல்லாம் தெரியும். அவர் ஒரு சாணக்கியர்.
நீங்கள் சினிமாவில் வெற்றி பெற்றதை வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் தண்ணீர் பிரச்சினையைக்கூட இன்னும் தீர்க்க முடியாத நிலையில் இருக்கிறீர்கள். இப்படியிருக்கும்போது மதப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணப்போகிறீர்கள் என்பது தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
