ஆதாரில் முகவரி மாற்றம்.. சிலிண்டர் பில்லை தொலைத்து விடாதீங்க.. ரேஷன் கார்டை ஏற்க மறுக்கும் வங்கிகள்
சென்னை: வெளியூரில் வசிப்பவர்கள் தயவு செய்து உடனடியாக ஆதாரில் முகவரியை மாற்றிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களால் வங்கி கணக்கு தொடங்குவது கூட சவாலானதாக மாறும். ரேஷன் கார்டில் முகவரியை மாற்றுவது போல் ஆதாரில் மாற்றுவதே சிறந்தது. ஆனால் பலர் ஆதாரில் முகவரியை மாற்றுவதற்குப் பெரிதும் யோசிக்கிறார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கே சிக்கல் வருகிறது. ஆதாரில் முகவரியை மாற்றச் சிலிண்டர் பில் கேட்கிறார்கள். ரேஷன் கார்டை முகவரி சான்றாக வங்கிகள் ஏற்பதில்லை. வங்கி கணக்கு தொடங்கவும் ஆதாரில் முகவரியை மாற்றியிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூரில் குடும்பத்துடன் வசிப்பவர்கள், சொந்த ஊரின் அடையாளமாக உள்ள முகவரியை மாற்ற விரும்புவதில்லை. ஏனெனில், ஆண்டிற்கு ஒரு முறை வீடு மாறுவது, அவ்வப்போது வீடு மாறுவது போன்ற தொல்லைகளை வாடகை வீட்டில் அனுபவிக்கிறார்கள். அதனால் சொந்த ஊர் முகவரியே நிரந்தரம் என்பதால் ஆதாரில் முகவரியை மாற்றப் பலர் தயங்குகிறார்கள். ஆனால், தேனியில் வாழ்ந்த ஒருவர் சென்னையில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ஆதாரில் முகவரியை மாற்றி இருக்க வேண்டும். அப்படி மாற்றியிருந்தால் அன்றே கணக்கு தொடங்கிவிடும்.

ஆனால் ஆதாரில் முகவரியை மாற்றவில்லை என்றால், 60 நாட்களுக்குள் வாங்கிய சிலிண்டர் பில்லைச் சமர்ப்பிக்க வேண்டும். பழைய பில்லை ஏற்க மாட்டார்கள். ஒருவேளை சிலிண்டர் பில்லை நீங்கள் தொலைத்துவிட்டால், அடுத்த சிலிண்டர் வாங்கும் வரை காத்திருக்க வேண்டும். வாடகை ஒப்பந்த பத்திரத்தைக் காட்டியும் வங்கி கணக்கு தொடங்கலாம்; ஆனால் பெரும்பாலான வங்கிகள் கேஸ் பில்லைத் தான் கேட்கின்றன.
ஒருவேளை உங்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving Licence), பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் எளிதாக வங்கி கணக்கு தொடங்க முடியும். ஆதாரையே மாற்ற விரும்பாதவர்கள், மற்ற ஆவணங்களை மாற்றியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே சிலிண்டர் பில் மட்டுமே சான்றாக ஏற்கப்படுகிறது. ரேஷன் கார்டை முகவரி ஆதாரமாக ஏற்க வங்கிகள் தயாராக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
சிலிண்டர் கணவர் பெயரில் இருக்கிறது என்றால், தனது மனைவிக்கு அவர் ஒரு கடிதம் தந்த பின்னரே வங்கி கணக்கை தொடங்க முடியும். ஆனால் வங்கி கணக்கு தொடங்குவதற்குக் குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் என்பதே தற்போதைய நிலையாக இருக்கிறது. வெளியூரில் சொந்த வீடு வாங்கியவர்கள் உடனே ஆதார் முகவரியை மாற்றிவிட்டால் சிக்கல் இருக்காது. அதேநேரம் சில வங்கிகள் ஆதாரில் எந்த ஊர் முகவரி இருந்தாலும் அன்றே வங்கி கணக்கைத் தொடங்குகின்றன; சிலிண்டர் பில்லில் உள்ள முகவரியைத் தொடர்பு முகவரியாக உடனே அங்கீகரிக்கவும் செய்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உண்மை... உங்களிடம் ஆதார் கண்டிப்பாக இருக்க வேண்டும்; பான் கார்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதார், பான் கார்டு இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கவே முடியாது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications
