கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்... பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளுக்கு தடை
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் 9 மாணவர்களுக்கு கெரோனா தொற்று உறுதியானதை அடுத்து தமிழ்நாட்டில் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மறு உத்தரவு வரும்வரை கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கக்கூடாது எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 40 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் விமான சேவையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் படிப்படியாக ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் தங்களை உஷார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. இன்றைய நிலவரப்படி ஊரடங்கு ஏதும் அறிவிக்காவிட்டாலும், அந்தந்த மாநில அரசுகள் ஆலோசனைகளை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. மக்கள் அனைவரும் தடுப்பூசி கட்டயாம் போடவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றன.

அண்ணா பல்கலையில் தொற்று
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆனால் அவர்களை பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை தொடரும். பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும். கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவருந்த அனுமதி தரக் கூடாது என தெரிவித்தார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கல்லூரிகளில் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications