சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பு ஊசி மருந்து ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் காட்டுவதா? மத்திய பாஜக அரசு மீது வைகோ பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலங்களுக்கான தடுப்பு ஊசி மருந்து ஒதுக்கீடு செய்வதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவது வேதனை தருவதாக மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "ஒன்றிய அரசு இதுவரையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 இலட்சம் அலகு தடுப்பு ஊசி மருந்தும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.10 இலட்சம் அலகு தடுப்பு ஊசி மருந்தும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மே 30 ஆம் தேதி வரை 87 இலட்சம் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.

தற்போதைய இருப்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்பதால், தேவையான தடுப்பு ஊசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கு 42.58 இலட்சம் தடுப்பு ஊசி மருந்து ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது என்றும், இதில் முதல் தவணை ஜூன் 6 ஆம் தேதிதான் கிடைக்கும் என்றும் மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இலங்கையில் சீனாவின் கடற்படைத் தளம்? வைகோ எச்சரிக்கை கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இலங்கையில் சீனாவின் கடற்படைத் தளம்? வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் தடுப்பூசி நிறுத்தம்

தமிழகத்தில் தடுப்பூசி நிறுத்தம்

இதனால் ஜூன் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தடுப்பு ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பு ஊசி மட்டுமே ஒரே தீர்வு என்றும், அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வூட்டி வருகின்றது. இந்நிலையில், தடுப்பு ஊசி மருந்து கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணிக்கு அறைகூவலாக ஆகிவிடும்.

ஒன்றிய அரசின் பாரபட்சம்

ஒன்றிய அரசின் பாரபட்சம்

தடுப்பு ஊசி செலுத்துவது மிகவும் குறைவான விகிதத்தில் இருந்தால், தமிழ்நாடு முழுவதும் போடும் பணி நிறைவு அடைய நீண்ட காலம் ஆகும். இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியாது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பு ஊசி மருந்து ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சமாக நடந்து கொள்வதுதான் வேதனை அளிக்கின்றது.

மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வு

மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வு

மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்த மருந்தில், குஜராத், உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, அரியானா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மட்டுமே 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தத் தவறான கொள்கையின் விளைவாக, தடுப்பு ஊசி செலுத்துவதில் மாநிலங்களுக்க இடையே ஏற்றத்தாழ்வு உருவாகி வருகின்றது. 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்தி உள்ளது.

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்

தமிழ்நாட்டில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையைப் போக்கிட, செங்கல்பட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பயோடெக்கில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியைத் தொடங்க வேண்டும். ரூ.700 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (Integrated Vaccine Complex) உடனடியாக மருந்து ஆக்கப் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கவனப்படுத்தி உள்ளார். இதை ஏற்றும், மாநில உரிமையை மதித்தும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

English summary
MDMK General Secretary and Rajyasabha MP Vaiko has condemned that the Centre's allocation on Vaccines to the States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X