தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி! எத்தனை பேருக்கு தெரியும்? வைகோ கூறும் பிளாஷ்பேக்!
சென்னை: இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாகவும் வைகோ பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள வரலாற்று தகவல்களின் விவரம் வருமாறு;

நீதிக்கட்சி
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் நவம்பர் 20,1916ல் தோன்றியது. அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாட்டு நிலைப் பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

சமூக நீதி வெளிச்சம்
நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கே சமூக நீதி வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம் என்ற பெருமை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920, ஆண், பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது.

அனைவருக்கும் சமவாய்ப்பு
பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க குழுக்களை நியமித்தது.

பார்ப்பனர் அல்லாத சமூகம்
ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து, அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்; கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற ஆணைக்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

இலவசக் கல்வி
பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காகப் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு ஓட்டு
சென்னை மாகாணப் பெண்கள் 1921 முதல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

பணியாளர் தேர்வு வாரியம்
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும், கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. தேவதாசி முறை ஒழித்துக்கட்டப்பட்டது. பணியாளர் தேர்வு வாரியம் 1924-இல் ஏற்படுத்தப்பட்டது.

மேட்டூர் அணை
இதுவே இந்தியாவின் முதல் பொதுப்பணித் தேர்வாணையமாகும். 1924இல், பனகல் அரசர் காலத்தில்தான் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும், இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணைகட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு, இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று, மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மையில் செழிக்க வழி வகை செய்தது நீதிக்கட்சி அரசு.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications