அதி கனமழை எச்சரிக்கை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவாரூர், வேலூர், தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (இன்று) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ரெட் அலர்ட்
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களில் கனமழை
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், தேனி
12 ஆம் தேதியன்று நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல அதி கனமழை எச்சரிக்கை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, வேலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.












Click it and Unblock the Notifications