அன்பில் மகேஷ் சவால் விடுத்த வீடியோ.. கார் டிரைவர் சரவணன் எங்கே.. தீவிரமாக தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதாகி உள்ளார். அந்த வழக்கில் ஒரு வீடியோ ஆதார காட்சி இருக்கிறது. அதில் இடம்பெற்றிருந்த கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அப்பேோது தான் வழக்கில் உண்மையில் திருப்பம் ஏற்படும் என்பது தான் காரணம் ஆகும்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.400 கோடி வரை ஊழல் நடந்ததாக ஆளும் தவெக அரசு குற்றம்சாட்டி வருகிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உச்சகட்டமாக கடந்த அக்டோபர் 26-ந் தேதி தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைதானார். அன்பில் மகேஷை 3 நாட்கள் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Anbil Mahesh

அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது காரசார விவாதம் நடந்தது. அன்பில் மகேஷ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, முதலில் ரூ.100 கோடி லஞ்சம் என்றார்கள் தற்போது ரூ.800 கோடி என உயர்த்தியிருக்கிறார்கள். அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார்; அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி அரசகுமார் தான் ரூ.100 கோடி வசூலித்துள்ளார். அரசகுமார் பணம் வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தற்போது போலீசார் மாற்றி உள்ளார்கள். ஊழல் வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பதை 20 ஆண்டுகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில் கையெழுத்திட்டது அரசு கூடுதல் செயலாளர், அன்பில் மகேஷ் கிடையாது. 20 வருடங்களுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பது கூட்டாக எடுத்த முடிவு. அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல துறை அதிகாரிகளை கடந்துதான் சென்றுள்ளது. அரசகுமார் பொய் சொல்லியிருந்தால் அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும்?. அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்கள் வாக்குமூலத்தில் என்னை (அன்பில் மகேஷை) கைது செய்திருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை?. அரசகுமார் செய்த தவறுக்கு அன்பில் மகேஷை ஏன் காரணம் ஆக்க வேண்டும்?. லஞ்சம் கொடுத்தவர்கள் சாட்சிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.

அரசு தரப்பு வாதிடுகையில், அன்பிலை காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் குறித்து அன்பிலிடம் விசாரிக்க வேண்டும். முத்துகுமார் சரணடைந்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. முத்துகுமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். முத்துகுமார் குறித்தும் அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டும்.

அன்பில் வீட்டிற்கு பணத்தை எடுத்து சென்ற டிரைவர் சரவணன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்று உள்ளது. அன்பில் மகேஷை மீண்டும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது. தற்போதைய நிலையில் ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும். புதிய பி.என்.எஸ். சட்டப்படி 60 நாள்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்று அரசு தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், சரவணன் பணம் எடுத்துச் சென்ற வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா?. என் வீட்டிற்கு பணம் கொண்டு சென்றதாக வீடியோ இருந்தால் வழக்கு முடியும் வரை ஜாமின் வேண்டாம். வீடியோ ஆதாரத்தை போலீசார் சமர்ப்பித்தால் ஜாமின் மனுவை திரும்ப பெறுகிறோம் என வாதிட்டனர்.

அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய இந்த வழக்கில் வரும் 10-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் அரசகுமாரும், அவரது கூட்டாளிகள் இருவரும் ஜாமீனில் இருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் கோர்ட்டில் சரணடைந்தார். அவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முத்துக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். முத்துக்குமாரின் கார் டிரைவரான சுரேஷ் என்பவர் வெளியிட்டதாக ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோ காட்சியில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்த ஊழல் பணம், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் பரவுகிறது.
ஆனால் அன்பில் மகேஷ் அதை மறுத்துள்ளார். குறிப்பிட்ட வீடியோ காட்சியை வெளியிடுமாறு போலீசாருக்கு அவர் சவாலும் விடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சியில் சரவணன் என்பவரும் இடம்பெற்றுள்ளாராம்.

விருத்தாசலத்தை சேர்ந்த அவர், முத்துக்குமாரின் நெருங்கிய உறவினரும், இன்னொரு கார் டிரைவரும் ஆவார். அவர் இந்த வழக்கில் தற்போது போலீசாரால் முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.. தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய, தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சரவணன் கைது செய்யப்பட்டால், இந்த வழக்கின் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+