அதிமுகவின் பலவீனம்.. பயன்படுத்தி கொண்ட விஜய்.. விசில் சின்னத்திற்கு சென்ற எதிர்ப்பு வாக்குகள்!
சென்னை: அதிமுக பலவீனம் அடைந்துள்ள தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக கணிசமான வாக்குகளை கைப்பற்றும் என்பது எக்ஸிட் போல் வாயிலாக தெரிய வந்துள்ளது. அதேபோல் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலும், விஜய் முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் Axis My India எக்ஸிட் போல் தவெக தனித்தே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 22 முதல் 32 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் என்று கூறியுள்ள Axis My India, திமுக 92 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்று கூறியுள்ளது. ஆனால் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பின் யாரைக் கேட்டாலும், தவெகவுக்கு வாக்களித்தேன் என்று சொல்வது சாமானிய மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
தவெக 20% வாக்குகள் வரை பெறும் என்று பலரும் கணித்திருக்கின்றனர். இதன் மூலமாக திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் தவெக பெறுவது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், அதிமுக பலவீனமாக இருக்கும் தென் மாவட்டங்களில் தவெக கணிசமான வாக்குகளை கைப்பற்றுகிறது. லோக்சபா தேர்தலின் போது தென் மாவட்டங்களில் அதிமுக 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் ராமநாதபுரத்திலும் அதிமுக பலவீனமாகவே இருக்கிறது. இந்த மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகள் விஜய் பக்கம் திரும்பி இருப்பதாக தெரிகிறது. அதேபோல் திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகளவில் கைப்பற்றுகிறார். அதாவது திமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக போட்டியிடாமல் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தால், அங்கு விசில் சின்னத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக களத்தில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
இதன் மூலமாக தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடவும், தவெகவுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கு சாமானிய மக்கள் வந்துவிட்டது புரிகிறது. அதேபோல் அதிமுகவினர் சிலரே இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை என்றால், அந்த தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கின்றனர்.
மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தரப்பில் வைட்டமின் எம் களமிறக்கப்பட்ட விநியோகம் நடந்திருக்கிறது. அந்த தொகுதிகளில் பணம் பெற்ற வாக்காளர்களும் கூட, தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர். இதனால் எக்ஸிட் போல் முடிவுகள் மே 4ல் உண்மையாக கூட மாறலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications