புதுக்கோட்டை, ஈரோடு! அடுத்தடுத்து செல்லும் விஜய்! பின்னணியில் இப்படி ஒரு கணக்கா? இது லிஸ்ட்ல இல்லையே
சென்னை: தமிழக முதல்வர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் நவம்பர் 2 ஆம் தேதி புதுக்கோட்டைக்கும், அடுத்த நாள் ஈரோடு மாவட்டத்திற்கும் செல்கிறார். இந்த பயணத்தின் போது விஜய் ரோடு ஷோ சென்று மக்களையும் சந்திக்க உள்ளார். விராலிமலை, பெருந்துறையில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் வரும் நவம்பர் 2 ஆம் தேதி புதுக்கோட்டை செல்ல திட்டமிட்டுள்ளார். புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கும் முதல்வர் விஜய், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை, ஈரோடு செல்கிறார் விஜய்
இதற்கு அடுத்த நாளே, ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து கோவை வரும் முதல்வர் விஜய், கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஈரோடு செல்கிறார். அங்கு தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் விஜய் ரோடுஷோ செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் செல்லும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் ஈரோடு பெருந்துறையில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலை மனதில் கொண்டு விஜய் செல்ல முடிவு செய்து இருக்கிறாரா? என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
விஜய் பயணம் ஏன்?
அதேபோல சமீப காலமாக விஜய் மீதான அதிருப்தி மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடர் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலை வாசி உயர்வு ஆகியவை விஜய்க்கு பெரும் தலைலியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் சரிந்து வருவதாக பேசப்படும் நிலையில், உண்மையாகவே களம் எப்படி இருக்கிறது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளவே விஜய்யின் இந்த பயணம் இருக்கலாம் என்ற கருத்தும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் கரூர், அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் சுற்றுப்பயணம் செல்வரா? என்ற விவாதமும் கூடவே அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மதுரந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற விஜய் கடும்பாடு பட வேண்டியிருந்தது. பொதுத்தேர்தல் பிரசாரத்தை விட அதிக மெனக்கெட்டு இரண்டு தொகுதிகளிலும் விஜய் பிரசாரம் செய்தார்.
சூடுபிடிக்க தொடங்கும் இடைத்தேர்தல் களம்
அப்போதும், தவெக எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. வெற்றி பெற்றாலும் கூட, வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், விஜய் அப்செட் ஆனதாக சொல்லப்படும் நிலையில், 5 தொகுதி தேர்தல் களமும் தவெகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதால், இப்போதே தேர்தல் வியூகத்தை தவெக தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் விஜய்யின் அடுத்தடுத்த பயனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க இருப்பதால் இடைத்தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.





Click it and Unblock the Notifications
