சென்னையில் 5 தொகுதிகள்.. மயிலாப்பூரில் அடித்து தூக்கும் தவெக.. எடப்பாடி பழனிசாமி செய்த தவறு!
சென்னை: சென்னையின் 5 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தவெக வேட்பாளர்கள் கடுமையான சவால் அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெரம்பூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய தொகுதிகளில் தவெக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெக பக்கம் சென்றால், அந்த வேட்பாளர்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கிறது. தவெக தரப்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு தவெக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுவிட்டு வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்காததே காரணம்.

இதனை தவெகவினரே கூறி வருகின்றனர். தவெக வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லையில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்திய விஜய், தூத்துக்குடியில் ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து காரைக்குடியில் ரோடு ஷோ நடத்திவிட்டு, கன்னியாகுமரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதன்பின் விஜய் நேற்று சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். இன்னும் கடலூர், திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லாத போதும், அக்கட்சி வேட்பாளர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகரில் தவெகவுக்கு அதிமுகவை விடவும் சில தொகுதிகள் அதிக ஆதரவு இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் ஒருநாள் மட்டுமே பிரச்சாரம் செய்திருந்தாலும், தவெகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் திமுக வேட்பாளர் சேகருக்கு தவெக கடுமையான போட்டியை அளித்து வருகிறது. இங்கு பாமக வேட்பாளர் திலகபாமா டெபாசிட் வாங்குவாரா என்பதே சந்தேகம் தான்.
அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுவை எதிர்த்து பாஜக தரப்பில் தமிழிசை செளந்தரராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியிலும் தவெக பொருளாளர் வெங்கடரமணனுக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், தமிழிசையை விடவும் தவெக வேட்பாளர் வெங்கடரமணன் அதிக வாக்குகளை பெறுவார் என்று சில கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் செந்தமிழன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியிலும் அமமுக வேட்பாளரை விடவும் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் அதிக வாக்குகளை கைப்பற்றுவார் என்று சொல்லப்படுகிறது. மறுபக்கம் அம்பத்தூர் தொகுதியிலும் தவெக வேட்பாளர் பாலமுருகன் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இங்கும் அதிமுக கூட்டணி சார்பாக சேகர் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி தொகுதி அமைச்சர் நாசருக்கு எதிராக பாஜக களமிறக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் ராஜசிம்ஹா மகேந்திராவை விடவும், தவெக வேட்பாளர் ரமேஷ் குமார் தொகுதிக்குள் சுழன்று வருகிறார். சரியாக அதிமுக போட்டியிடாத இடங்களில் தவெகவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் திமுகவுக்கு கடுமையான சவாலை தவெக அளித்து வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications