எடப்பாடி போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. ஆட்டையை கலைத்த சண்முகம்! மெயினே அவர் தானாமே! டி.ஜெ பொய் சொன்னாரா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பற்றி நாங்கள் ஒன்றும் பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் கூறினார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் ஓபிஎஸ் பற்றிப் பேசியதாகவும், ஓபிஎஸ்ஸை மையப்படுத்தி காரசார விவாதம் நடைபெற்றதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் பற்றி ஈபிஎஸ் அணி நிர்வாகிகள் பலரும் பேசிய நிலையில், இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் திமுகவின் பி டீம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓபிஎஸ் பற்றி தரக்குறைவாக யாரும் விமர்சிக்கக்கூடாது என்றும் கண்டிப்போடு தெரிவித்திருக்கிறார் ஈபிஎஸ்.
கடந்த 6 மாதங்களாகவே, இரு தரப்பினரும், மாற்றி மாற்றி கடுமையான வார்த்தைகளால் சீண்டிக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் பற்றி யாரும் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்று எடப்பாடி தனது அணியினருக்கு உத்தரவு போட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் நடத்திய கூட்டம்
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், தனது அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினர். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸை தாக்கிப் பேசினார். எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

உடனே பறந்த நோட்டீஸ்
இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இதுபோல கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்குகு உடனடியாக பதிலளிக்காவிட்டால் உறுதியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் பதில் எச்சரிக்கை
அந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளித்து ஓபிஎஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், "ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஓபிஎஸ்சுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் சட்ட விரோதமானது. கட்சி அலுவலகம் மீதான சட்டப்பூர்வமான உரிமைகளை இன்னும் நீதிமன்றம் தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக இனியும் இதுபோன்று தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி டீம் ஆலோசனை
இந்நிலையில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, ஓபிஎஸ் தரப்பின் நடவடிக்கைகள், எடப்பாடி பழனிசாமி தரப்பு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ், அதற்கு ஓபிஎஸ் தரப்பு அளித்த பதில் ஆகியவை பற்றிப் பேசப்பட்டுள்ளது. மேலும், பாஜக கூட்டனி பற்றியும் பேசியதோடு, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை உறுதி செய்துள்ளனர்.

ஓபிஎஸ்ஸை சேர்க்கக்கூடாது
இந்தக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் ஒரு அரசியல் போலி. ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்கவே கூடாது. சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொண்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும்" என்றார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். பல்வேறு நிர்வாகிகள் இதனை வரவேற்றுப் பேசினர். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதே கருத்தை ஒருமித்த குரலாக வலியுறுத்தினர்.

சி.வி.சண்முகம் சொன்ன வார்த்தை
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம், பாஜகவு உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்தால் கூட நமக்கு நல்லது நடக்கும், கட்சிக்கு வலிமை கிடைக்கும், ஆனால், பாஜகவை கூட்டணியில் சேர்த்தால் நமக்கு பலவீனம் தான் எனப் பேசியதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீங்க பேச வேண்டாம்
இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி குறித்து யாரும் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்றும் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், லோக்சபா தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டுமென்றும் வாக்குச்சாவடி மட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார். அதிமுகவை பாஜக எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்றும் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் எனக் கூறியதில்லை என்றும் தேர்தலின்போது யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அதிமுகவே உறுதிசெய்யும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓபிஎஸ் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது
பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டும் ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ‘பி' டீமாக செயல்படுவதாகவும் ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் என்றும், கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸை, எடப்பாடி தரப்பினரும், ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் தரப்பினரும் சரமாரியாக விமர்சித்துப் பேசி வரும் சூழலில், ஓபிஎஸ்ஸை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கக்கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் ஈபிஎஸ்.

நாங்க பேசவே இல்லையே
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச வேண்டிய அவசியமே ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். "கட்சிக்குள் பிரச்சனை இல்லை. இல்லாத பிரச்சனையை எதற்குப் பேச வேண்டும்? ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் , சசிகலா ஆகியோர் பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது குறித்துதான் விவாதித்தோம். ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவதைப் போல ஓபிஎஸ் செய்கிறார். அதை பற்றிப் விவாதித்து எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். ஓபிஎஸ் பற்றி நாங்கள் பேசவே இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தாலும், ஓபிஎஸ்ஸை சுற்றித்தான் அனைவரது பேச்சும் இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications