வெளியிலிருந்து வந்த "லீகல் டீம்".. சரிபட்டு வருமா? எடப்பாடி கேட்ட ஒற்றை கேள்வி.. சத்தமே இன்றி சரவெடி
சென்னை: டெல்லியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நேற்று திரும்பி வந்த நிலையில், நேற்று இரவே அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றார். அங்கு பல்வேறு பாஜக தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்தார்.
பிரதமர் மோடியை இவர் சந்திக்கவில்லை என்றாலும் முக்கியமான பாஜக நிர்வாகிகளுடன் இவர் நீண்ட நேரம் சந்திப்பு மேற்கொண்டார். இதில் பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக ஓபிஎஸ் பிளான்
தற்போது ஓபிஎஸ் திட்டப்படி அதிமுகவில் முதலில் பொதுக்குழு கூடுவதை தடுக்க வேண்டும். ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு தன்னுடைய அனுமதி இல்லை. ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லை என்று கூறி அதை தடை செய்ய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். அதோடு தொண்டர்களை காணவும், தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

எடப்பாடி பிளான் என்ன
ஆனால் எடப்பாடி தரப்பு பதிலுக்கு இன்று கொங்கு மண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தன்னுடைய ஆதரவாளர்கள், தனக்கு ஆதரவாளர்களாக நீடிக்க வேண்டும். ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.

சட்ட போராட்டம்
இது பற்றி அதிமுகவில் இருக்கும் நடுநிலை நிர்வாகிகளிடம் விசாரித்ததில்.. இரண்டு தரப்பும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இரண்டு தரப்பிலும் பிடிவாதமாக இருக்கிறார்கள். முக்கியமாக எடப்பாடி தரப்பு கண்டிப்பாக விட்டுக்கொடுக்காது. அதிமுகவில் பொதுக்குழு கூடுவதற்கு எதிராக வழக்கு தொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் சட்ட போராட்டங்களை தொடங்கலாம்.

பதிலடி
இதற்கு எதிராக வழக்கு தொடுக்க எடப்பாடியும் முடிவு செய்துள்ளார். அதன்படி, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் கிடையாது. அவர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று கூறி எதிர் வழக்கு தொடுக்க எடப்பாடி முயன்று வருகிறாராம். இது தொடர்பாக பெரிய சட்ட போராட்டம் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை செய்து இருக்கிறார்.

லீகல் டீம்
அதிமுக லீகல் டீம் என்று இல்லாமல்.. வெளியே இருந்து சில சட்ட வல்லுநர்களை வரவழைத்து இருக்கிறார். அவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்து.. ஓபிஎஸ்ஸை எப்படி தடுக்கலாம் என்று கேட்டுள்ளனர். சசிகலாவை கட்சியில் இருந்தே நீக்கியது போல ஓபிஎஸ்சை நீக்க முடியுமா.. சரிபட்டு வருமா என்ற ஒற்றை கேள்வியை எடப்பாடி தரப்பு கேட்டதாக தெரிகிறது. இதற்கு அதிமுக விதியில் எதாவது சிக்கல் இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறாராம்.

விதி என்ன
அதிமுக விதிப்படி.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தொண்டர்களே தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு தேர்வு செய்ய முடியாது. எனவே அவர்களை நீக்கவும் முடியாது. ஆனால் இந்த விதி இன்னும் அமலுக்கே வரவில்லை. செப்டம்பருக்குள் விதி அமலுக்கு வரவில்லை என்றால் காலாவதி ஆகிவிடும். இதனால் விதி அமலுக்கு வரும் முன் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கினால்.. அதன்பின் ஓபிஎஸ் வெறும் அடிப்படை உறுப்பினர்தான்.

எளிதாக நீக்கலாம்
இதனால் அவரை எளிதாக கட்சியில் இருந்து நீக்கிவிட முடியும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறதாம் லீகல் டீம். எனவே அடுத்த பொதுக்குழுவிற்கு முன்னதாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்று அறிவிக்க எடப்பாடி தரப்பு ஆலோசனை செய்து வருகிறதாம். கண்டிப்பாக இது தொடர்பாக அவசர வழக்குகள் நடக்கும் என்கிறார்கள். அதிமுகவில் விரைவில் சரவெடி ஒன்றை வெடிப்பதற்காக இப்போதே சத்தமின்றி திரி பற்ற வைக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications