“புரிய வேண்டியவங்களுக்கு புரியும்”.. டெல்லிக்கு ‘மெசேஜ்’ கொடுத்த எடப்பாடி.. ஷாக் ஆன சீனியர்கள்!
சென்னை : நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவை சீண்டும் விதமாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி நிர்வாகிகள் நம்மிடம் தான் இருக்கிறார்கள், ஓபிஎஸ்ஸை நம்பினால் இங்கு வெற்றி பெற முடியாது என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என எடப்பாடி பழனிசாமி மா.செக்கள் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் கால் மணி நேரம் மட்டுமே பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு எதிரான செயல்பாடுகள் பற்றிப் பேசியதோடு, கேப்பில், பாஜக பற்றியும் மறைமுகமாக பேசியதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

மா.செக்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 7 மாவட்ட செயலாளர்களும், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியும் பங்கேற்கவில்லை.

5 தொகுதிகளுக்கு 1
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும், 17, 20 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் என நடத்திட வேண்டும் என ஈபிஎஸ் ஆர்டர் போட்டிருக்கிறாராம்.

முக்கியமான மேட்டர்கள்
மேலும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக விவகாரத்தில் பாஜக நடந்துகொள்வது பற்றியும் எடப்பாடி பழனிசாமி சூடாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பெயரை வெளிப்படையாகச் சொல்லி எதுவும் பேசவில்லை என்றாலும் பாஜகவையும், திமுகவையும் உள்ளே இழுத்துள்ளார்.

பாஜகவுக்கு சேதி
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் செல்போன்கள் அனைத்தும் முன்னரே வாங்கி வைக்கப்பட்டு, கூட்டம் முடிந்ததும் தான் அவர்களிடம் வழங்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஓபிஎஸ் தரப்புக்கோ, பாஜகவுக்கோ கசியக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டை ஈபிஎஸ் டீம் செய்திருந்தது. எனினும், பாஜகவுக்கு எப்படியும் இந்த தகவல்கள் சென்றுவிடும் என்பது ஈபிஎஸ்ஸுக்கு தெரிந்தே பாஜக பற்றி சில விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது.

சிலரோடு சேர்ந்துகொண்டு
கட்சியில் 95 சதவீத நிர்வாகிகள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திலும் நாம் நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம். உறுதியாக நமக்கு சாதகமான ரிசல்ட் தான் வரும். நமக்கு எதிரானவர்கள், சிலரோடு கூட்டு சேர்ந்துகொண்டு வெற்றியை தடுக்க நினைக்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தடை தான், நிரந்தரமாக தடுக்க முடியாது என ஈபிஎஸ் பேசினாராம்.

மறைமுக சீண்டல்
மேலும், பாஜகவை மறைமுகமாகச் சீண்டும் வகையிலும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்தது என்கிறார்கள். நம்முடன் கூட்டணி சேர்ந்தால் தான் இங்கு எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியும். நம்மை விட பலம் குறைவானவர்களை வைத்துக்கொண்டு யாராலும் ஜெயிக்க முடியாது, இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் எனப் பேசியுள்ளார்.

முதல் வேலை
மேலும், திமுக மீதும், அமைச்சர்கள் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது, அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியான நமக்கு ஆளுங்கட்சியினரே நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது தான் நம் முதல் வேலையாக இருக்க வேண்டும் என ஈபிஎஸ், தனது தரப்பு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications